முறுமுறுக்கிறவர்கள் யூதா 1:16
யூதா 1:16. இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.
கள்ளப்போதகர்கள் விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள். இவர்கள் துன்மார்க்க சுபாவமுள்ளவர்கள். இவர்களிடத்தில் காணப்படுகிற இன்னும் சில தீயசுபாவங்களைப்பற்றி யூதா விரிவாக எழுதுகிறார்.
இவர்கள் முறுமுறுக்கிறவர்கள். மற்றவர்களுக்கு விரோதமாக எப்போதும் முறுமுறுக்கிறவர்கள் தீயசுபாவமுடையவர்கள். இவர்கள் தங்களுடைய சிந்தையில் பலவீனராயும் துன்மார்க்கராயும் இருப்பார்கள்.
முறுமுறுக்கிறவர்களுக்கு எதிலும் திருப்தி இருக்காது. என்ன நடந்தாலும் இவர்கள் கோபப்படுவார்கள். தாங்கள் இப்போதிருக்கிற நிலமையில் திருப்தியடையமாட்டார்கள். கர்த்தருடைய கிருபையினால் தாங்கள்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்னும் எண்ணம் இவர்களிடத்தில் இருக்காது. எவ்வளவு இருந்தாலும் இவர்களிடத்தில் திருப்தியோ, சந்தோஷமோ இருக்காது.
முறுமுறுக்கிறவர்கள் தங்களைப்பற்றியும், மற்றவர்களைப்பற்றியும் எப்போதும் முறையிட்டுக்கொண்டிருப்பார்கள். தங்களைத் தவிர இந்த உலகத்தில் இவர்களுடைய கண்களுக்கு யாருமே நல்லவர்களாகத் தெரியமாட்டார்கள்.
மற்றவர்களைப்பற்றி எப்போதும் முறையிட்டுக்கொண்டும். குறைசொல்லிக்கொண்டும் இருப்பார்கள். மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்களென்று நினைப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு இருக்கக்கூடிய வசதிகளும் வாய்ப்புக்களும் தங்களுக்கு இல்லையென்று தங்களைப்பற்றி மற்றவர்களிடத்தில் முறையிடுவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயஇச்சைகளின்படி நடப்பார்கள். இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும். சந்தியத்தைப் பேசாது, இவர்களிடத்தில் மனத்தாழ்மையிருக்காது. தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள். தங்களைப்பற்றி எல்லோரும் பெருமையாக பேசவேண்டுமென்று எதிர்பார்த்து மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவார்கள். கர்த்தருடைய சத்திய வசனம் இப்படிப்பட்டவர்களை ஆளுகை செய்வதில்லை. இவர்களுடைய சுயஇச்சைகளே இவர்களை ஆளுகை செய்கிறது.