1 யோவான் அதிகாரம் 5 விளக்கம்
விசுவாசிகளின் மேன்மை (1யோவா 5:1). விசுவாசிகள் தேவனிடத்திலும் அவருடைய பிள்ளைகளிடத்திலும் அன்புகூரவேண்டும் (1யோவா 5:2,3). இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் உலகத்தை ஜெயிக்கிறவர்கள் (1யோவா 5:4,5). இயேசுகிறிஸ்து ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர் (1யோவா 5:6-10). தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார் (1யோவா 5:11-13). தேவனுடைய சித்தத்தின்படி நாம் ஜெபம்பண்ணும்போது அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் (1யோவா 5:14-17). பொல்லாங்கனாகிய சாத்தான் விசுவாசிகளைத் தொடமாட்டான் (1யோவா 5:18). விசுவாசிகளுக்கும் உலகத்தாருக்கும் வித்தியாசமுண்டு (1யோவா 5:19). தேவனைப்பற்றிய மெய்யான அறிவு (1யோவா 5:20). விக்கிரங்களுக்கு விலகி நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.
இயேசுவானவரே கிறிஸ்து 1யோவா 5:1
1யோவா 5:1. இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகயிருக்கிறார்கள். அவர்கள் நம்முடைய ஆவிக்குரிய சகோதரர்கள். தேவனே அவர்களைப் பிறப்பித்தவர். தம்முடைய பிள்ளைகளைப் பிறப்பித்த தேவனிடத்தில் நாம் அன்புகூரவேண்டும். அதே சமயத்தில் தேவனால் பிறப்பிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளிடத்திலும் நாம் அன்புகூரவேண்டும். இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவர்கள், தங்களுடைய தெய்வீக பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும், வழிநடத்துதலுக்கும் தங்களை இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கிறவர்கள்.
எல்லா விசுவாசிகளும் தேவனுடைய பிள்ளைகளாகயிருக்கிறோம். நாம் சுபாவத்தில் பாவிகளாகயிருந்தாலும், இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கும்போது, நாம் தேவனால் பிறந்திருக்கிறோம். ஆவிக்குரிய ரீதியாக நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோம். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள், தேவனால் பிறந்தவர்களிடத்திலும் அன்புகூரவேண்டும்.
இயேசு கிறிஸ்துவே மேசியா என்றும், அவருடைய பாவநிவாரண இரத்தத்திலும் விசுவாசம் வைத்திருக்கிறவர்கள் தேவனால் பிறந்திருக்கிறார்கள். தேவனால் பிறந்திருக்கிறவர்கள் தேவனிடத்திலும், மனுஷரிடத்திலும் அன்புகூருகிறார்கள். இதுவே இரட்சிப்பின் எளிமையான சத்தியமாகும்.
தேவனிடத்தில் அன்புகூருவது 1யோவா 5 : 2-4
1யோவா 5:2. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம்.
1யோவா 5:3. நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
1யோவா 5:4. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நம்மிடத்திலுள்ள அன்பு மெய்யாகவே இருக்கும். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வார்கள். நம்மைப்போலலவே மற்ற விசுவாசிகளும் தேவனால் பிறந்தவர்கள். பரிசுத்த ஆவியினால் அவர்கள் புதிய ஜீவனைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களும் நம்மைப்போலவே மறுபடியும் பிறந்தவர்கள்.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்திலும் அன்புகூருகிறோம். தேவனிடத்தில் அன்புகூருவதே அவருடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருவதற்கு ஆதாரமாயிருக்கிறது. நாம் தேவனிடத்தில் அன்புகூரவில்லையென்றால் அவருடைய பிள்ளைகளிடத்திலும் நாம் அன்புகூரமாட்டோம்.
தேவனுடைய பிள்ளைகளிடத்தில் நாம் அன்புகூருவது மெய்யான அன்பாக இருக்கவேண்டும். தேவனுடைய பிள்ளைகளை சாதாரண மனுஷராகப் பாவித்து அன்புகூரக்கூடாது. அதற்குப் பதிலாக அவர்களும் நம்மைப்போலவே தேவனால் பிறந்தவர்கள் என்பதை அறிந்து, அவர்களிடத்தில் அன்புகூரவேண்டும். இதுவே மெய்யான அன்பு. நாம் தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூரும்போது, மெய்யாகவே நாம் தேவனிடத்திலேயே அன்புகூருகிறோம்.
நாம் தேவனிடத்தில் அன்புகூருவது உண்மையுள்ள அன்பாக இருக்கவேண்டும். நம்முடைய அன்பு மெய்யான அன்பு என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாகும். நாம் மெய்யாகவே தேவனிடத்தில் அன்புகூரும்போதுதான், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்னும் விருப்பம் நமக்குள் உண்டாயிருக்கும். நாம் தேவனுடைய கற்பனைகளிலும், அவைகளை கைக்கொள்வதிலும் பிரியப்படுவோம். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வது நமக்கு கடினமாயிராது. தேவனுடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. அது எளிதாகயிருக்கும். தேவனுடைய கற்பனைகளும் நமக்குப் பிரியமானதாகயிருக்கும்.
தேவனால் பிறந்தவர்கள் தேவனுக்காகப் பிறந்தவர்கள். நாம் இந்த உலகத்திற்காக மறுபடியும் பிறக்கவில்லை. நாம் பரலோகத்திற்காகவே மறுபடியும் பிறந்திருக்கிறோம். தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். விசுவாசமே நம்முடைய ஜெயத்திற்கு முக்கிய காரணம். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். நாம் உலகத்தை எதிர்த்து நிற்கும்போது விசுவாசத்தினால் இயேசுகிறிஸ்துவைப் பற்றிக்கொள்கிறோம். விசுவாசத்தினாலேயே தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து பெலனைப்பெற்றுக்கொள்கிறோம். இந்தப் பெலத்தினாலேயே நாம் உலகத்தை ஜெயிக்கிறோம். இந்தப் பெலன் விசுவாசத்தினால் உண்டாயிருக்கிறது.
தேவனிடத்தில் அன்புகூருவதும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதும் நாம் தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோம் என்பதற்குச் சான்றுகளாகும். தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருவது நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறோம் என்பதற்குச் சான்றாகும்.
1யோவான் நிருபத்தில் தேவனால் பிறப்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள்
1. நீதியைச் செய்வதற்கு வல்லமை (1யோவான் 2:29)
2. தேவனுடைய பிள்ளையென்று அழைக்கப் படுவது. (1யோவான் 3:1-3)
3. பாவத்திலிருந்து விடுதலை (1யோவான் 2:9)
4. தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருதல். (1யோவான் 4:7-8)
5. தேவனிடத்தில் அன்புகூருதல். (1யோவான் 4:19)
6. புதிய ஏற்பாட்டுக் கற்பனைகளைக் கைக்கொள்வதற்கு வல்லமை. (1யோவான் 5:2-3)
7. உலகத்தை ஜெயிப்பதற்கு வல்லமை. (1யோவான் 5:4-5)
8. சாத்தானிடமிருந்து விடுதலை. (1யோவான் 5:18)
விசுவாசத்தினால் வரும் ஆசீர்வாதங்கள்
1. சரீர சுகமாதல் (மத் 8:10; அப் 3:16)
2. பாதுகாப்பு (மத் 8:26; மத் 14:31)
3. அன்றன்றுள்ள ஆகாரம். (மத் 16:8-10)
4. மன்னிப்பு (லூக்கா 7:50; ரோமர் 3:25)
5. அற்புதங்கள் (அப் 6:8; கலா 3:5)
6. இருதயத்தில் சுத்தம் (அப் 15:9)
7. பரிசுத்தமாதல் (அப் 26:18)
8. நீதி (ரோமர் 3:22; ரோமர் 9:30)
9. நீதிமானாக்கப்படுதல். (ரோமர் 3:28-31;)
10. வாலிபம் புதுப்பிக்கப்படுதல். (ரோமர் 4:17-20)
11. ஸ்திரத்தன்மை. (1கொரி 16:13; 2கொரி 1:24)
12. கிறிஸ்தவ ஜீவியம். (2கொரி 5:7; எபி 10)
13. பரிசுத்த ஆவியானவர் (கலா 3:2,14)
14. தேவனுடைய பிள்ளை. (கலா 3:26)
15. இரட்சிப்பு (அப் 4:12; எபே 2:8-9)
16. கிறிஸ்து வாசம்பண்ணுவது. (எபே 3:17)
17. கிறிஸ்துவிற்குள் ஞானஸ்நானம். (கொலோ 2:12)
18. வல்லமையின் கிரியைகள் (1தெச 1:3; 2தெச 1:11)
19. தெய்வீக பக்திவிருத்தி. (1தீமோ 1:4)
20. தைரியம் (1தீமோ 3:13)
21. நிச்சயம். (எபி 10:22)
22. நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுதல். (எபி 10:23)
23. பொறுமை. (யாக் 1:3; 1பேதுரு 1:7)
24. சுதந்தரம் (யாக் 2:5)
25. சாத்தானை எதிர்த்து நிற்கும் வல்லமை. (1பேதுரு 5:9)
26. உலகத்தின்மீது ஜெயம். (1யோவான் 5:4)
27. பக்திவிருத்தி. (யூதா 1:20)
28. எபிரெயர் 11 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள்
விசுவாசத்தைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வாக்குத்தத்தங்கள்
1. கூடாத காரியம் ஒன்றுமில்லை. (மத் 17:20)
2. எல்லாம் கூடும். (மத் 21:21)
3. சொன்னபடியே ஆகும். (மாற்கு 11:22-24)
4. இரட்சிப்பு (அப் 4:12; 1பேதுரு 1:5-13)
5. அன்றாடத் தேவைகள். (மத் 6; லூக்கா 12:28)
6. கிறிஸ்தவ ஜீவியத்தில் ஜெயம். (ரோமர் 1:17)
7. தேவனிடத்தில் கிட்டிச்சேருதல். (ரோமர் 5:2)
8. பரிசுத்த ஆவியானவர். (கலா 3:14)
9. வாக்குத்தத்தங்கள் நிறைவேறுதல். (எபி 6:12)
10. சரீர சுகமாதல். (யாக் 5:14-16)
உலகத்தை ஜெயிக்கிறவன் 1யோவா 5:5
1யோவா 5:5. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
இயேசுகிறிஸ்துவை மெய்யாகவே தங்களுடைய இரட்சகராகவும் ஆண்டவராகவும் விசுவாசிக்கிறவர்கள் மாத்திரமே இந்த உலகத்தை ஜெயிக்கிறவர்கள். நாம் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவேண்டும். அவர் தேவனிடத்திலிருந்து இந்த உலகத்திற்கு இரட்சராக வந்தவர் என்றும் நாம் விசுவாசிக்கவேண்டும். நம்மிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசம் இருக்குமென்றால், இந்த விசுவாசத்தினால் நாம் உலகத்தை ஜெயிக்கலாம். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாகயிருக்கும்.
இயேசுகிறிஸ்துவின் கிருபாதாரபலியினால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இந்த உலகத்தின் பாவங்களிலிருந்தும், சாத்தானுடைய அடிமைத்தனத்திலிருந்தும் இயேசுகிறிஸ்துவினுடைய வல்லமையினால் நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம். இயேசுகிறிஸ்து இல்லையென்றால் நம்முடைய ஆத்துமாவுக்கு இரட்சிப்பு இல்லை. இயேசுகிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தை நம்முடைய மீட்பின் கிரயமாகச் செலுத்தவில்லையென்றால் நமக்கு மீட்பும் இல்லை. இயேசுகிறிஸ்து நமக்காக தம்மையே பாவநிவாரண பலியாக செலுத்தவில்லையென்றால், நம்முடைய பாவத்தை நிவிர்த்தி செய்வதற்கு நமக்கு வேறொரு பலியும் இல்லை. நம்முடைய இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவில் மாத்திரமே அடங்கியிருக்கிறது.
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தை ஜெயித்தார். அவர் தமக்காக மாத்திரம் இந்த உலகத்தை ஜெயிக்காமல், தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் இந்த உலகத்தை ஜெயித்தார். இயேசுகிறிஸ்துவினுடைய ஆவி இப்பிரபஞ்சத்திலுள்ள உலகப்பிரகாரமான காரியங்களில் சந்தோஷப்படவில்லை. கிறிஸ்துவானவர் பரிசுத்தர். அவர் பரிசுத்தத்தை விரும்புகிறவர். அவர் விரும்புகிற பரிசுத்தம் இந்த உலகத்திலும் இல்லை. இந்த உலகத்தாரிடத்திலும் இல்லை.
கர்த்தருடைய பிள்ளைகள் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவேண்டும். நாம் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கக்கூடாது. நாம் உலகத்திற்குரியவர்களல்ல. உலகம் நம்மை ஜெயிக்கக்கூடாது. நாமே உலகத்தை ஜெயிக்கவேண்டும். உலகத்தின் மாம்ச இச்சைகளையும், பாவங்களையும், அக்கிரமங்களையும் நாம் ஜெயிக்கவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகள் இந்த உலகத்தை ஜெயித்து பரலோகத்திற்குள் பிரவேசிக்கவேண்டும். அதுவே நமக்கு ஆசீர்வாதமான உலகம். பரலோகமே நமக்கு நித்திய வாசஸ்தலம்.
நம்முடைய சுயபலத்தினாலோ, சுயமுயற்சியினாலோ, சுயவல்லமையினாலோ நம்மால் உலகத்தை ஜெயிக்க முடியாது. நாம் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கும்போது நம்மால் உலகத்தை ஜெயிக்க முடியும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவர்கள் தேவனால் பிறந்தவர்கள். தேவனுடைய கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிற தம்முடைய பிள்ளைகளுக்கு தேவன் இந்த உலகத்தை சுதந்தரமாகக் கொடுக்க விரும்பவில்லை. நாம் இந்த உலகத்தை சுந்தரித்துக்கொள்வது தேவனுடைய திட்டமல்ல. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இந்த உலகத்தில் பங்குமில்லை பாத்தியமுமில்லை. தேவன் நமக்கு பரலோகத்தில் சுதந்தரம் வைத்திருக்கிறார். தேவனால் பிறந்தவர்களெல்லோரும் பரலோக ராஜ்யத்தின் சுதந்தரத்திற்கு பங்காளிகளாகயிருக்கிறார்கள்.
பரலோகத்திற்குரியவர்களாகிய நம்மை இந்த உலகம் ஜெயிக்கக்கூடாது. நாம்தான் இந்த உலகத்தை ஜெயிக்கவேண்டும். இந்த உலகத்தை ஜெயிக்கிறவர்களே மெய்யான விசுவாசிகள். நாம் இந்த உலகத்தில் ஜீவித்தாலும், இந்த உலகத்தை ஜெயிக்கிறவர்களாக இருக்கவேண்டும். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவர்கள் மாத்திரமே இந்த உலகத்தை ஜெயிப்பார்கள். நம்மையல்லாமல் வேறு யாராலும் இந்த உலகத்தை ஜெயிக்க முடியாது.
ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் 1யோவா 5:6
1யோவா 5:6. இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
நம்முடைய விசுவாசத்திற்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே அஸ்திபாரமாகயிருக்கிறார். தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு கிறிஸ்துவானவர் கிருபைகளையும், வெகுமதிகளையும் கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் இந்த உலகத்திற்கு வந்தவர். இந்த உலகத்திலிருக்கிற நாமோ உள்ளாகவும், புறம்பாகவும் அசுத்தமாயிருக்கிறோம். பாவக்கறைகளோடிருக்கிறோம். நமக்குள்ளாக பாவசுபாவம் இருக்கிறது. இது நம்முடைய ஜென்மபாவசுபாவம். இந்தப் பாவத்தை சுத்திகரிப்பதற்கு நமக்கு ஆவிக்குரிய ஜலம் தேவை.
நாம் புறம்பாகவும் பாவத்தினால் கறைபடிந்திருக்கிறோம். நம்முடைய புறம்பான பாவங்களெல்லாம் பாவநிவாரண இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படவேண்டும். நம்முடைய உள்ளான மனுஷனும் பாவத்தினால் கறைபட்டிருக்கிறான். புறம்பான மனுஷனும் பாவத்தினால் கறைபட்டிருக்கிறான். ஆகையினால் நம்முடைய உள்ளான மனுஷனும் சுத்திகரிக்கப்படவேண்டும். நம்முடைய புறம்பான மனுஷனும் சுத்திகரிக்கப்படவேண்டும்.
நாம் ஜலத்தினாலும் கழுவப்படவேண்டும். இரத்தத்தினாலும் சுத்திகரிக்கப்படவேண்டும். இந்த சுத்திகரிப்பு முறை பழைய ஏற்பாட்டு சடங்காச்சார சுத்திகரிப்பு முறைமைகளோடு ஒத்திருக்கிறது. இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையிலே மரிக்கும்போது, அவருடைய விலாவிலே ஒரு போர்ச்சேவகன் ஈட்டியால் குத்தினான். அப்போது இயேசுகிறிஸ்துவின் விலாவிலிருந்து தண்ணீரும் இரத்தமும் புறப்பட்டு வந்தது.
அப்போஸ்தலர் யோவான் இயேசுகிறிஸ்துவின் விலாவிலிருந்து புறப்பட்டு வந்த தண்ணீரையும் இரத்தத்தையும் தன்னுடைய கண்களால் கண்டார். நம்முடைய இரட்சிப்புக்கு இயேசுகிறிஸ்துவின் தண்ணீரும் இரத்தமும் போதுமானதாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவினுடைய விலாவிலிருந்து புறப்பட்டு வந்த தண்ணீரினால் நம்முடைய ஆத்துமாக்கள் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. அவருடைய விலாவிலிருந்து புறப்பட்டு வந்த இரத்தத்தினால் தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார். அவருடைய பிரமாணம் கனப்படுத்தப்படுகிறது.
இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். அதே இரத்தத்தினால் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டவர்களாகயிருக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக நிறுத்தப்படுகிறோம். நம்முடைய ஆத்தும இரட்சிப்புக்கு இயேசுகிறிஸ்துவின் ஜலமும் இரத்தமும் எல்லாவிதத்திலும் போதுமானதாகயிருக்கிறது.
இயேசுகிறிஸ்து ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவரென்று யோவான் எழுதுகிறார். கிறிஸ்துவானவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தார் என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். தேவனுடைய ஆவியானவர் சத்திய ஆவியானவர். அவர் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர். ஆவியானவருடைய சாட்சி எல்லா அங்கீகரிப்புக்கும் போதுமானதாகவும், பாத்திரமானதாகவும் இருக்கிறது. சத்திய ஆவியானவர் இயேசுகிறிஸ்துவைப்பற்றி பரலோகத்திலிருந்து சாட்சி கொடுக்கிறார்.
இயேசுவைப் பற்றி ஆவியானவர் சாட்சி கொடுக்கும் வழிகள்
1. இயேசு குழந்தையாக இருந்த பொழுது அவரை மேசியா என்று அறிக்கையிடுவதற்காக பரிசுத்த ஆவியானவர் சிமியோனை இயேசுவிடம் வழிநடத்தினார். (லூக்கா 2:27-32)
2. இயேசு கிறிஸ்து சரீரப் பிரகாரமாக வளர்ச்சி பெற்றபோது ஆவியானவர் அவருக்குப் பயிற்சி கொடுத்தார். (லூக்கா 2:40-52)
3. இயேசுவே மேசியா என்பதை உறுதிபண்ணுவதற்காக ஆவியானவர் அவர்மீது வந்திறங்கினார். (மத் 3:16)
4. தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை நிறைவேற்றுவதற்காக ஆவியானவர் இயேசு கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணினார். (மத் 12:18)
5. இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய ராஜரீகத்தை வெளிப்படுத்துவதற்காக ஆவியானவர் இயேசு கிறிஸ்துவை மறுரூபப்படுத்தினார். (மத் 16:28)
6. எல்லோருடைய பாவங்களையும் மன்னிக்கும் பாவநிவாரண பலியாக தம்மை ஒப்புக் கொடுப்பதற்கு ஆவியானவர் இயேசு கிறிஸ்துவை வழிநடத்தினார். (எபி 9:14)
7. ஆவியானவர் இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்தார். இதனால் இயேசு கிறிஸ்து மரணம், பாதாளம், கல்லறை ஆகியவற்றின்மீது வெற்றி சிறந்தார். (1பேதுரு 3:18-19)
8. பெந்தெகொஸ்தே நாளில் ஆவியானவர் மேலறையில் ஒருமனப்பட்டு ஜெபம் பண்ணியவர்கள்மீது வந்திறங்கி, இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறிப் போனதையும், அவர் உயர்த்தப்பட்டதையும் உறுதிபண்ணினார். (யோவான் 7:37-39)
9. இயேசு கிறிஸ்துவே மேசியா என்பதைக் குறித்துக் கூறப்பட்டிருக்கும் தீர்க்க தரிசனங்களைப் பரிசுத்த ஆவியானவர் நிறைவேற்றுகிறார். (யோவான் 14:16-17,26)
10. இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரிடத்திலும் ஆவியானவர் சாட்சி பகருகிறார். (யோவான் 3:16)
11. ஒவ்வொரு விசுவாசியும் புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் காரியங்களை நிறைவேற்றுவதற்கு ஆவியானவர் அவருக்குப் பெலனளிக்கிறார். (மத் 18:18)
12. இயேசு கிறிஸ்துவின் ஜீவியம், உபதேசங்கள், புதிய உடன்படிக்கை ஆகியவற்றை ஆவியானவர் ஏவி எழுத வைத்திருக்கிறார். (அப் 1:1-2)
பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி 1யோவா 5:7
1யோவா 5:7. (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
புதிய ஏற்பாடு ஆரம்பத்தில் கிரேக்கு பாஷையில் எழுதப்பட்டது. கிரேக்கு பாஷை சுவடிகள் பலவற்றில் ஏழாவது வசனம் காணப்படவில்லை. ஆகையினால் இந்த வசனம் அதிகாரப்பூர்வமானதா, பரிசுத்த ஆவியானவர் இந்த வசனத்தை ஏவியிருக்கிறாரா என்பது பற்றி வேதபண்டிதர்கள் விவாதம்பண்ணுகிறார்கள். இந்த விவாதம் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவர்கள் உலகத்தை ஜெயிக்கிறவர்கள். நம்முடைய விசுவாசத்திற்கு இயேசுகிறிஸ்துவே ஆதாரமாகவும் அஸ்திபாரமாகவும் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவில் நாம் வைத்திருக்கிற விசுவாசம் உறுதியாயிருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியும் உறுதியாயிருக்கவேண்டும். தேவன் தமது குமாரனைக்குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார். மனுஷருடைய சாட்சியைவிட தேவனுடைய சாட்சி மேன்மையானது.
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய தேவனுடைய சாட்சியை விவரிக்கும்வண்ணமாக இந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது. பிதா, வார்த்தை, பரிசுத்தஆவியானவர் ஆகிய மூவரும் பரலோகத்திலே இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சி கொடுக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் இந்தப் பூமிக்கு வந்தவர் என்று பரலோகத்திலே இம்மூவரும் சாட்சியிடுகிறார்கள். இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியத்திற்கு ஏராளமான சாட்சிகள் உண்டு. கிறிஸ்துவைப்பற்றி மனுஷரும் சாட்சி கொடுக்கிறார்கள். தேவனும் சாட்சி கொடுக்கிறார். மனுஷருடைய சாட்சியைவிட தேவனுடைய சாட்சி மேன்மையானதாயிருக்கிறது.
இயேசுகிறிஸ்து ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் இந்தப் பூமிக்கு வந்தரென்று பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். ஆவியானவர் பரலோகத்திலே சாட்சியிடுகிறார். தேவன் திரித்துவ ஆள்தத்துவமுள்ளவர். தேவன் தம்மை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று ஆள்தத்துவங்களில் வெளிப்படுத்துகிறார். இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். தேவன் ஒருவரே.
ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் இந்தப் பூமிக்கு வந்த இயேசுகிறிஸ்துவைப்பற்றி தேவன் சாட்சி கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன். தேவன் தமது குமாரனைக்குறித்து சாட்சி கொடுக்கிறார். அவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் இந்த உலகத்திற்கு வந்தவரென்று பிதாவானவர் தமது குமாரனைக்குறித்து சாட்சி கொடுக்கிறார். தேவனுடைய சாட்சி மெய்யானது. தேவன் ஒருவரே. ஒரே தேவனே தம்மை பிதா, குமாரன், பரிசுத்தஆவியானவர் ஆகிய •மூன்று வெவ்வேறு ஆள்தத்துவ பண்புள்ளவர்களாக வெளிப்படுத்துகிறார். இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். இம்மூவரும் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பரலோகத்திலே சாட்சியிடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவே இந்தப் பூமிக்கு ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவரென்று சாட்சியாய் அறிவிக்கிறார்கள்.
பரலோகத்தின் திரித்துவ தேவன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சியாக அறிவிக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு இந்த உலகத்தின்மீது அதிகாரமுண்டு என்பதை தேவனுடைய சாட்சி உறுதிபண்ணுகிறது. இயேசுகிறிஸ்துவைக்குறித்து பிதாவானவரே முதலாவதாக சாட்சி கொடுக்கிறார். பிதாவானவர் தம்முடைய சாட்சியினால் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை முத்திரையிடுகிறார்.
இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சி கொடுக்கிற இரண்டாவது நபர் ""வார்த்தை''. இயேசுகிறிஸ்துவின் மாம்சசுபாவத்தைக்குறித்து வார்த்தையானவர் சாட்சிகொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மனுஷத்துவத்திற்கு வார்த்தையானவர் சாட்சியாயிருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் மூன்றாவது சாட்சி. பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர். இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவரென்று பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுத்து, தம்முடைய சாட்சியை தம்முடைய சத்தியத்தினாலும் பரிசுத்தத்தினாலும் முத்திரையிடுகிறார். பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் இயேசுகிறிஸ்துவைக்குறித்து பரலோகத்திலே சாட்சியிடுகிறார்கள். இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
""பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே'' என்னும் வாக்கியம் பழங்கால மூலபாஷை சுவடிகளில் காணப்படவில்லை. ஆகையினால் இதை வேதாகமத்திலிருந்து எடுத்துவிடலாம் என்று பொருளல்ல. இந்த வாக்கியமும் வேதாகமத்தின் ஒரு பகுதியே. இதற்கான காரணங்கள் ஆதித்திருச்சபைத் தலைவர்கள் இந்த வாக்கியத்தை மேற்கோளாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். கார்தேஜின் பிஷப்பாகிய சிப்ரியன் (200-258 கி.பி.) என்பவர் இந்த வாக்கியத்தை யோவான் எழுதியிருப்பதாக உறுதிபண்ணுகிறார். தாப்சூசின் விகிலியஸ் ஐந்தாம் நூற்றாண்டில் இந்த வசனத்தை மேற்கோளாகக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கோடக்ஸ் மான் போர்ட்டி வல்கேட் ஆகிய சுவடிகளில் இந்த வாக்கியம் காணப்படுகிறது. திரித்துவத்தைக் குறித்த உபதேசத்திற்கு இந்த வாக்கியம் எவ்விதத்திலும் முரண்படாமல் ஒத்திருக்கிறது.
இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். பிதா, வார்த்தை என்னும் இயேசு, பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். ""ஒரு'' என்னும் வார்த்தை வேதாகமத்தில் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையைப் பொருத்தளவில் மூன்று என்பது ஒன்றாகாது. ஆயினும் ஒற்றுமையில் மூன்றும் ஒன்றாயிருக்கலாம்.
திரித்துவத்தைக் குறித்த தவறான கருத்துக்கள்
1. தேவன் என்று ஒரே ஒரு நபர் மட்டுமே இருக்கிறார். அந்த நபரை மட்டுமே தேவனென்று அழைக்க முடியும்.
2. மூன்று மனுஷ நபர்கள் என்பதற்கும், மூன்று தெய்வீக நபர்கள் என்பதற்கும் பொருளில் வேற்றுமை உள்ளது.
3. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்றும் ஒரே நபருடைய மூன்று வெளிப்படுத்துதல்களைக் குறிக்கும்.
4. பிதாவாகிய தேவன் மட்டுமே தெய்வீக நபர். குமாரனைப் பிதா சிருஷ்டித்தார். குமாரன் பரிசுத்த ஆவியானவரைச் சிருஷ்டித்தார்.
5. தேவன் மூன்று நபர்களாக ஒரே நபரில் இருக்கிறார். அதாவது ஒருவருக்குள் மூவர்.
6. மனுஷனுக்குச் சரீரம், ஆத்துமா, ஆவி ஆகியவை இருப்பது போன்று, ஒரே நபருக்குள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்றும் உள்ளன.
7. தேவன் ஒரு குழப்பமான ஆள்தத்துவப் பண்புடையவர். அவரைத் திரித்துவத்தின் மூலமாக விளக்குவது இயலாத காரியம்.
8. திரித்துவம் என்பது மனுஷனால் புரிந்து கொள்ள முடியாத ஒரு தத்துவம். அதிகக் கல்வி கற்ற கல்விமான்கள் கூட திரித்துவத்தின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறார்கள்.
9. திரித்துவம் பழைய ஏற்பாட்டின் வெளிப்பாடு அல்ல.
10. தேவன் ஆள்தத்துவப் பண்புடையவர் அல்ல.
11. தேவனைப் பிரத்தியேட்சமாய் கண்களால் யாரும் காணவில்லை.
12. சிந்தை, மனம், அன்பு, நன்மை, வல்லமை ஆகியவற்றில் தேவன் உலகளாவிய பண்புடையவர். ஆகையினால் அவர் ஒரு நபர் அல்ல. முழு உலகத்தையும் நிறைத்திருக்கிறவர்.
13. தேவனுக்கு ஒப்பான ஒருவர் இந்தப் பூமியில் இல்லை.
14. தேவனை ஆத்துமாவில் மட்டுமே உணர முடியும்.
15. தேவனுடைய சாயல் என்பது ஆன்மீக சாயலை மட்டுமே குறிக்கும்.
16. தேவன் ஆள்தத்துவப் பண்புடையவர் என்பது ஒரு கற்பனையே.
17. இயேசு கிறிஸ்துவே பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவராகவும் இருக்கிறார்.
18. இயேசு கிறிஸ்து ஒரு தேவன். யெகோவா பழைய ஏற்பாட்டின் தேவன்.
மேலே கூறப்பட்டிருக்கிற எந்தக் கருத்திற்கும் வேதவசனங்களில் ஆதாரம் எதுவுமில்லை. தேவனைப் பற்றி இவ்வாறு பல தவறான கருத்துக்கள் காலாகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. தேவனைப் புரிந்து கொள்ள முடியாது என்றால் ரோமர் 1:20-இல் ""காணப் படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்'' என்று பவுல் ஏன் எழுதியிருக்க வேண்டும்.
திரித்துவ உபதேசம்
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் தனித்தனியாக ஆள்தத்துவப் பண்புடையவர்கள் என்பதும், அவர்கள் ஒன்றாய் இருக்கிறார்கள் என்பதும், தெய்வீக திரித்துவ உபதேசமாகும். மனுஷருக்கும், தேவதூதருக்கும் சொந்தமாக சரீரமும், ஆத்துமாவும், ஆவியும் இருப்பதுபோலவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக சரீரமும், ஆத்துமாவும், ஆவியும் உள்ளன. தேவனுடைய சரீரம் என்று சொல்லும் போது அது பௌதீக சரீரமாகவோ அல்லது ஆன்மீக சரீரமாகவோ இருக்கலாம். சரீரம் என்பது ஆவி, ஆத்துமா ஆகியவற்றின் வாசஸ்தலம். ஆத்துமா உணருகிறது. ஆவி அறிகிறது.
திரித்துவ உபதேசத்தை உண்டாக்கப் பட்டிருக்கிற காணக்கூடிய காரியங்கள் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ளலாம். (ரோமர் 1:20) மனுஷன் இந்தப் பூமியில் தேவனுடைய சாயலாகவும், அவருடைய ரூபத்தின் பிரகாரமாகவும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். மனுஷன் ஆள்தத்துவப் பண்புடையவன். ஆகையினால் தேவனுடைய சாயல் அல்லது ரூபம் என்பது ஆவிக்குரிய காரியங்களை மட்டும் குறிப்பிடாமல் ஆள்தத்துவக் காரியத்தையும் குறிப்பிடுகிறது. தேவனுக்குச் சரீரமில்லை என்று சொல்வோமானால், மனுஷருக்கும் சரீரம் இருக்க முடியாது. ஏனெனில் மனுஷன் தேவசாயலாகவும், அவருடைய ரூபத்தின் பிரகாரமாகவும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறவன்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் ஒரே நபர் என்னும் தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒருவரில் மூவர் உள்ளனர் என்று கூறுவோமானால், ஒரு மனுஷனுக்குள் பல மனுஷர்கள் இருக்க வேண்டும். சரீரம் என்று சொல்லும்போது அது மாம்சத்தினாலான சரீரமாகத்தான் இருக்க வேண்டும் என்னும் அவசியம் ஏதுமில்லை. ஏனெனில் வேதாமகத்தில் ஆவிக்குரிய சரீரங்களையும், பரலோகத்திற்குரிய சரீரங்களையும் குறித்து நாம் வாசிக்கிறோம். ""வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு, வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே''
தேவனுக்கு சரீரம், ரூபம், சாயல், சரீர உறுப்புகள், ஆவி, ஆத்துமா ஆகியவை உள்ளதாக வேதாகமம் கூறுகிறது. ஒரு ஆள்தத்துவப் பண்புடையவருக்குச் சரீரம், ஆத்துமா, ஆவி ஆகியவை அவசியம் தேவை. இம்மூன்றும் தேவனுடைய ஆள்தத்துவப் பண்பில் உள்ளன.
தேவனுடைய ஆள்தத்துவப் பண்புகள்
1. தனிப்பட்ட ஆவி (சங் 143:10)
2. சிந்தை (ரோமர் 11:34)
3. ஞானம் (ஆதி 1:26)
4. சித்தம்(ரோமர் 8:27)
5. வல்லமை (எபே 1:19)
6. சத்தியம் (சங் 91:4)
7. விசுவாசமும், நம்பிக்கையும் (ரோமர் 12:3)
8. நீதி (சங் 45:4)
9. உண்மை (1கொரி 10:13)
10. அறிவும், ஞானமும் (ஏசா 11:2)
11. சிந்தனை (ஏசா 1:18)
12. பகுத்தறிவு (எபி 4:12)
13. மாறாத தன்மை (எபி 6:17)
தேவன் தம்மைச் சரீரப்பிரகாரமாகப் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மனுஷன் தேவனுடைய ரூபமாகவும், தேவனுடைய சாயலாகவும் இருக்கிறான். தேவனைக் காணமுடியாது. அவருடைய ரூபமாகவும், சாயலாகவும் இருக்கும் மனுஷன் மூலமாக தேவனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வேதாகமத்தில் தேவனுடைய சரீர உறுப்புக்களாக நாம் வாசிக்கும் காரியங்கள்
1. பின்பகுதிகள் (யாத் 33:23)
2. இருதயம் (ஆதி 6:6)
3. கைகளும், விரல்களும் (சங் 8:3-6)
4. வாய் (எண் 12:8)
5. உதடுகளும், நாவும் (ஏசா 30:27)
6. பாதங்கள் (எசே 1:27; யாத் 24:10)
7. கண்கள் (சங் 11:4)
8. காதுகள் (சங் 18:6)
9. தலைமுடி, தலை, முகம், கைகள் (தானி 7:9-14)
10. இடுப்பு (எசே 1:26-28)
தேவனுக்குச் சரீரப் பிரசன்னம் உள்ளது. ஓரிடதிலிருந்து மற்றொரு இடத்திற்கு மற்ற நபர்கள் போவதுபோலவே போகிறார்.
தேவனிடம் உள்ள காரியங்கள்
1. சத்தம் (சங் 29)
2. சுவாசம் (ஆதி 2:7)
3. முகரூபம் (சங் 11:7)
தேவன் செய்யும் காரியங்கள்
1. வஸ்திரம் தரிக்கிறார். (தானி 7:9-14)
2. போஜனம் பண்ணுகிறார் (ஆதி 18:1-8)
3. ஓய்வு எடுக்கிறார் (ஆதி 2:1-4)
4. பரலோகத்தில் வாசம்பண்ணுகிறார். (யோவான் 14:1-3)
5. சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் (ஏசா 6)
6. நடக்கிறார் (ஆதி 3:8)
7. ஏறிப்போகிறார் (சங் 18:10;
தேவனுடைய உணர்வுகள்
1. துக்கம் (ஆதி 6:6)
2. கோபம் (1இராஜா 11:9)
3. மனம்வருந்துதல் (ஆதி 6:6)
4. வைராக்கியம் (யாத் 20:5)
5. வெறுப்பு (நீதி 6:16)
6. அன்பு (யோவான் 3:16)
7. பரிதாபம் (சங் 103:13)
8. ஐக்கியம் (1யோவான் 1:1-7)
9. சந்தோஷம் (சங் 147:10)
10. உணர்வுகள் (கலா 5:22-23).
தேவதூதர்கள், கேருபீன்கள், சேராபீன்கள் ஆகியவற்றிற்கு ஆவிக்குரிய சரீரங்களும், ஆத்துமாக்களும், ஆவிகளும் உள்ளன. மனுஷர்கள் இவற்றைத் தங்கள் சொந்தக் கண்களால் தரிசித்திருக்கிறார்கள். ஆவிக்குரிய சரீரமும் ஒரு சரீரமே என்பதுதான் வேதாகமத்தின் உபதேசம். தரிசிக்க முடியாத எந்தப் பொருளையும் தேவன் இந்த உலகத்தில் சிருஷ்டிக்கவில்லை. பரலோகமும், ஒரு பௌதீகப் பொருளே.
மனுஷர்கள் தங்களுடைய சொந்தக் கண்களால் தேவனைப் பலமுறை தரிசித்திருக்கிறார்கள்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோரின் வெவ்வேறு தனித்தனியான ஆள்தத்துவப் பண்புகள்
1. ""ஒன்று'' என்னும் வார்த்தை ஒன்று என்னும் எண்ணையும், ஒற்றுமையையும் குறிக்கும். 1யோவான் 5:7, யோவான் 17:11, 21-23 ஆகிய வசனங்களில் ஒன்று என்பது ஒற்றுமையைக் குறிக்கிறது. ஆயினும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் வேதாகமத்தில் தனித் தனியாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே தேவனாகிய பிதாவும், ஒரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், ஒரே பரிசுத்த ஆவியானவரும் இருக்கிறார்கள். இவ்வாறாக தெய்வீக ஒருமையிலும், தெய்வீக பன்மையிலும் மூன்று வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்கள் உள்ளனர். பிதா தேவனென்று அழைக்கப்படுகிறார். குமாரன் தேவனென்று அழைக்கப் படுகிறார். பரிசுத்த ஆவியானவர் தேவனென்று அழைக்கப் படுகிறார். இம்மூன்று வெவ்வேறு தனித்தனி ஆள்தத்துவப் பண்புடையவர்களும் தேவன் என்று அழைக்கப்படும்போது இம்மூவரையும் மொத்தமாகக் குறிப்பிடும்போது ""தேவர்கள்'' என்று பன்மையில் குறிப்பிடாமல் ""தேவன்'' என்று ஒருமையிலேயே வேதாகமம் குறிப்பிடுகிறது. ஏனெனில் இவர்கள் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். தேவன் என்னும் வார்த்தையை ஒருமையாகவும், பன்மையாவும் பயன்படுத்தலாம்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரைக் குறித்தும் மொத்தமாகக் கூறப்பட்டிருக்கிற கருத்துக்களை அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் கூறலாம். அதே சமயத்தில் தேவத்துவத்தின் ஒவ்வொரு ஆள்தத்துவப் பண்புடையவருக்கும் தனித்தனியாகக் கூறப்படும் காரியங்கள் தேவத்துவத்தின் மற்ற ஆள்தத்துவப் பண்புடையவருக்குப் பொருந்தாது. பிதா கிறிஸ்துவின் தலையாக இருக்கிறார். இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரேபேறான குமாரன். பரிசுத்த ஆவியானவர் பிதாவினிடத்திலிருந்தும், குமாரனிடத்திலிருந்தும் வந்திருக்கிறவர்.
2. தேவனுடைய திருநாமங்கள் ஆள்தத்துவத்தின் பன்மைப் பண்பை உறுதிபண்ணுகிறது. ஆதி 1:1 ஆவது வசனத்திலும் மேலும் 2,700க்கு மேற்பட்ட பழைய ஏற்பாட்டு வசனங்களிலும் ஏலோஹிம் என்னும் சொல் தேவனைக் குறிக்கிறது. இது ஒரு ஒருமையும், பன்மையும் கலந்த பெயர்ச் சொல்லாகும். இதற்கு தேவன் என்றும், தேவர்கள் என்றும் ஒருமையிலும், பன்மையிலும் பொருள்கூறலாம். சில வசனங்களில் இந்த வார்த்தையோடு பன்மை வினைச்சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ""தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது'' ""அங்கே தனக்கு தேவன் தரிசனமான படியால்'' இவ்விரண்டு வாக்கியங்களிலும் ""தேவன்'' என்னும் சொல் பன்மையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
3. தேவனுடைய பெயரைக் குறிப்பதற்குப் பன்மை பிரதிப்பெயர்ச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிற படியினால், இது ஆள்தத்துவத்தின் பன்மைப் பண்பை விளக்குகிறது.
4. ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் பன்மை பிரதிப்பெயர்ச்சொற்கள் வேதாகமத்தில் தேவனைக் குறிப்பதற்கு நூற்றுக்கணக்கான வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மனுஷருக்குப் பயன்படுத்துவதுபோலவே தேவத்துவத்தின் மூன்று ஆள்தத்துவ நபர்களையும் குறிப்பதற்கு இந்தப் பிரதிப் பெயர்ச்சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சில வசனங்களில் தேவத்துவத்தின் வெவ்வேறு நபர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் குறிப்பிட்டு அழைப்பதற்கு இந்தப் பிரதிப்பெயர்ச் சொற்களைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். யோவான் சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்து பிதாவைக் குறிப்பதற்குத் தன்மை பிரதிப்பெயர்ச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். சில வசனங்களில் தேவத்துவத்தின் மூன்று நபர்களையும் மொத்தமாகக் குறிப்பதற்கு ஒருமை பிரதிப்பெயர்ச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சபையில் பல அங்கத்தினர்கள் இருந்த போதிலும் அந்தச் சபையை ஒரு மனுஷனாக வர்ணித்து, அதை ""அவர்'' என்னும் பிரதிப்பெயர்ச்சொல்லால் அழைக்கப் படுவதை நாம் வேதவசனங்களில் காணலாம்.
5. ""மனுஷன் நன்மை தீமை அறியத் தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்'' என்னும் வாக்கியம் தேவத்துவத்தின் பன்மையை விளக்குகிறது.
6. தேவத்துவத்தின் இரண்டு அல்லது மூன்று நபர்களும் ஒரே வசனத்தில் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் வெவ்வேறு நபர்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
7. ஆதி 19:24 ஆவது வசனத்தில் இரண்டு கர்த்தர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஒருவர் பூமியிலுள்ள கர்த்தர். மற்றொருவர் வானத்திலுள்ள கர்த்தர்.
8. பழைய ஏற்பாட்டில் தேவத்துவத்தின் இரண்டு நபர்களும் குறிப்பிடப் பட்டிருக்கிறார்கள்.
9. கர்த்தத்துவத்தின் இரண்டு நபர்கள் அருகருகே அமர்ந்திருப்பதாக வேதவாக்கியங்களில் குறிப்புக்கள் உள்ளன.
10. ஒரு பாஷையைச் சம்பாஷணை செய்வதற்கு இரண்டு நபர்கள் தேவை. தேவத்துவத்தின் இரு நபர்கள் ஒருவரோடொருவர் சம்பாஷணை பண்ணுவதாக வேதவாக்கியங்களில் குறிப்புக்கள் உள்ளன. இந்த வசனங்களில் ஒருவர் அபிஷேகம் பண்ணப்பட்டவர். ஒரேபேறான குமாரனாக இருக்கிறவர். ஒருவரை மற்றவர் அனுப்புகிறார். ஒருவருக்கு மற்றவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஒருவருக்கு மற்றவர் ஊழியக்காரராக இருக்கிறார். இருவருமே கர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்.
11. தேவத்துவத்தின் மூன்று நபர்களும் சுயமாகக் கிரியை செய்கிறவர்கள். கர்த்தராகிய தேவன், மேசியா, பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவருமே ஆசீர்வதிக்கிறவராகவும், அபிஷேகம் பண்ணுகிறவராகவும், அனுப்புகிறவராகவும், ஒருவருக்கொருவர் கிரியை செய்கிறவராகவும், இருக்கிறார்கள்.
12. சக 1:7-21 ஆகிய வசனங்களில் சேனைகளின் கர்த்தரும் கர்த்தருடைய தூதனும் பேசிக் கொள்வதாக நாம் வாசிக்கிறோம். சேனைகளின் தூதனுக்கு கர்த்தர் என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஒரு கர்த்தர் மற்றொரு கர்த்தரிடத்தில் அவர் இவரை இஸ்ரவேலிடத்தில் அனுப்பியதாகக் கூறுகிறார். ஒரு கர்த்தரை குறிப்பதற்கு ""என்னை'' என்னும் பிரதிப்பெயர்ச் சொல்லும் சேனைகளின் கர்த்தரைக் குறிப்பதற்கு ""அவர்'' என்னும் பிரதிப்பெயர்ச் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சக 13:6-7 ஆவது வசனம் வரையிலும் இவ்விருவரும் தொடர்ந்து சம்பாஷணை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
13. இயேசு கிறிஸ்து ஆபிரகாமின் குமாரன், தாவீதின் குமாரன், மரியாளின் குமாரன், தேவனுடைய குமாரன் என்று அழைக்கப் படுகிறார். இயேசு கிறிஸ்துவும், தேவனும் வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்கள்.
14. புதிய ஏற்பாட்டில் பல வசனங்களில் தேவத்துவத்தின் இரு நபர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
15. புதிய ஏற்பாட்டுப் புஸ்தகங்களின் முகவுரைகளில் தேவத்துவத்தின் இரண்டு நபர்களும், சில வசனங்களில் மூன்று நபர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
16. தேவன் கிறிஸ்துவிற்குத் தலையாக இருக்கிறார். ஆகையினால் தமது ஸ்தானத்தில் தேவன் கிறிஸ்துவைவிட உயர்ந்தவர்.
17. தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக கிறிஸ்து மத்தியஸ்தராக இருக்கிறார். அவர் தமக்கும், மனுஷனுக்கும் முன்பாக மத்தியஸ்தரல்ல.
18. தேவத்துவத்தின் இரண்டு நபர்களும், சில வசனங்களில் மூன்று நபர்களும் புதிய ஏற்பாட்டின் எல்லாப் புஸ்தகங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். தேவத்துவத்தின் மூன்று நபர்களும் வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்கள். ஆகையினால் மூவரையும் ஒருவராகக் கூற இயலாது. ஆயினும் மூவரும் ஒற்றுமையில் ஒருவராக இருக்கிறார்கள்.
19. இயேசு கிறிஸ்துவைக் குறித்து தேவத்துவத்தின் மூவரும் தனித் தனியாகச் சாட்சி பகருகிறார்கள். ஒரு காரியத்தை உறுதிபண்ணுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாட்சி அவசியமாயிருக்கிறது. 1யோவான் 5:8 ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தண்ணீரும், இரத்தமும் ஒரு கருத்தை உறுதிபண்ணும் ஆள்தத்துவப் பண்புடைய சாட்சிகள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோரே 1யோவான் 5:8 ஆவது வசனத்தில் சாட்சி பகருகிறவர்கள். இம்மூவரும் ஒருவர் என்று நாம் ஏற்றுக் கொள்வோமானால், இங்கு இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவத்தை நிரூபிப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இல்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் பகரும் சாட்சியை மூன்று தனித்தனி ஆள்தத்துவப் பண்புடையவர்களின் சாட்சிகள் என்று நாம் அங்கிகரிக்க வேண்டும்.
(1) பிதா (எரே 29:23)
(2) குமாரன் (ஏசா 55:4)
(3) பரிசுத்த ஆவியானவர் (ரோமர் 8:16)
இம்மூவரும் சாட்சிகள் என்றால் இவர்கள் வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்களே. தண்ணீரும், இரத்தமும் இவர்களுடைய சாட்சியை உறுதிபண்ணுகிறது. இயேசுவின் குமாரத்துவத்திற்குத் தண்ணீரும், இரத்தமும் கூடுதலான ஆதாரத்தைத் தருகிறது.
20. இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் ஆகியோரைப் பற்றி கூறும்போது ""மூலமாக'', ""ஆல்'' என்னும் வார்த்தைகள் அவர்களோடு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பிதாவாகிய தேவனோடு இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. இவர்கள் மூலமாக நடைபெறும் அனைத்து கிரியைகளையும் இயக்குகிறவர் பிதாவாகிய தேவனே. இவர் தனியாக ஆள்தத்துவப் பண்புடையவராகவும், தலையாகவும் இருக்கிறார்.
(1) இயேசு கிறிஸ்துவின் மூலமாக
(2) இயேசு கிறிஸ்துவினால்
(3) பரிசுத்த ஆவியானவர் மூலமாக
(4) பரிசுத்த ஆவியானவரால்
இயேசு கிறிஸ்து பிதாவானவர் அல்ல என்று கூறுவதற்குச் சான்றுகள்
1. இயேசு கிறிஸ்து பூமியில் இருந்த காலம் அனைத்திலும் பிதாவானவர் பரலோகத்தில் இருந்தார். (மத் 5:16,48).
2. இயேசு கிறிஸ்து இப்பொழுது பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்.
3. என்னுடைய பிதாவிற்கு முன்பாக நான் மனுஷரைக் குறித்து அறிக்கையிடுவேன் என்று இயேசு கூறியிருப்பதினால் இவரும், பிதாவும் ஒருவரல்ல என்பது தெளிவாகிறது. (மத் 10:32)
4. இயேசு கிறிஸ்து எப்பொழுதும் பிதாவை ஒரு தனி ஆள்தத்துவ பண்புடையவராகப் பாவித்து, அவரிடத்தில் ஜெபம் பண்ணினார். (மத் 11:25)
5. இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்கு வெளியே பிதாவானவர் இருந்தார். ஆகையினால், பிதாவானவர் இயேசுவாக இருக்க முடியாது. (மத் 2:12)
6. இயேசுவும், சாத்தானும் தேவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அந்தத் தேவன் இயேசு அல்ல. (மத் 4:6-10).
7. தேவன் இயேசுவின் பிதாவாக இருக்கிறார். (எபே 1:3,17)
8. இயேசு கிறிஸ்து தாம் கூறிய உவமைகளில் பிதாவோடு தமக்குள்ள ஐக்கியத்தைப் பற்றி கூறியிருக்கிறார். (மத் 21:33-46)
9. ஜனங்கள் பிதாவிடம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜெபிக்க வேண்டும் என்பது வேதாகம உபதேசம். (யோவான் 14:12-15)
10. இயேசு கிறிஸ்துவிற்கு அறிந்திராத காரியங்கள் பிதாவிற்குத் தெரியும். (மாற்கு 13:32).
11. இயேசு கிறிஸ்துவை ஒரு தனிநபராக மற்றவர்கள் கண்டிருக்கிறார்கள். (தானி 7:9-14).
12. தம்முடைய ஆவியை இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் ஒப்புக் கொடுக்காமல், பிதாவிடத்தில் ஒப்புக்கொடுத்தார். (லூக்கா 23:46).
13. தாம் தேவனிடத்திலிருந்து வந்ததாகவும், தேவனிடத்திற்குத் திரும்பிப் போவதாகவும் இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். (யோவான் 8:42).
14. தேவன் ஆவியாக இருக்கிறார். இயேசுவைப் போல மாம்சத்தினாலும், இரத்தத்தினாலும் ஆனவர் அல்ல. (யோவான் 4:24).
15. இயேசுவோடு இந்தப் பூமியிலிருந்த ஜனங்கள் வானத்திலிருந்து பிதாவானவர் தனி ஆள்தத்துவப் பண்புடைய நபராகப் பேசியதைக் கேட்டிருக்கிறார்கள். (மத் 3:17).
16. இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுடைய குமாரனாகக் கூறியிருக்கிறார். தம்மைப் பிதாவானவர் என்று அவர் ஒருபோதும் கூறியதில்லை. (யோவான் 5:17-35).
17. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு கூட, பிதாவை ""என் தேவனே'' என்று அழைத்திருக்கிறார். (யோவான் 20:17)
18. இயேசு கிறிஸ்து தேவனை ""என் பிதாவானவர்'' என்று 57 வசனங்களில் கூறியிருக்கிறார். (யோவான் 15:1).
19. இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்த போது தேவதூதர்களும், ஜனங்களும் தேவன் வானத்தில் இருந்ததாக அங்கிகரித்திருக்கிறார்கள். (லூக்கா 2:7-16).
20. மரியாளும் யோசேப்பும் குழந்தை இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க எருசலேமிற்குக் கொண் போனார்கள். (லூக்கா 2:22-24). இயேசு வேறு, கர்த்தர் வேறு என்று அவர்கள் நினைத்ததினால்தான் குழந்தை இயேசுவைத் தேவாலயத்திற்குக் கொண்டு போனார்கள்.
21. சிமியோனுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி பரிசுத்த ஆவியினால் அறிவிக்கப் பட்டிருந்தது. தேவத்துவத்தில் இயேசு கிறிஸ்து ஒரு நபர் என்பதை சிமியோன் தெரிந்து கொண்டார். (லூக்கா 2:26-33).
22. யோவான் ஸ்நானன் பிதாவை அறிந்திருந்தார். ஆனால் அவர் குமாரனை அறிந்திருக்கவில்லை. (யோவான் 1:31-34).
23. சிலுவையில் பிதா மரிக்கவில்லை. குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே மரித்தார். (1கொரி 15:3).
24. இயேசு கிறிஸ்துவே பிதாவாகிய தேவனுடைய ஒரேபேறான குமாரன். ஆகையினால் இயேசு பிதாவாக இருக்க முடியாது. (யோவான் 1:14).
25. இயேசு கிறிஸ்து தாமாக ஒரு கிரியையும் நடப்பிக்காமல், பிதாவானவர் தம் மூலமாகக் கிரியை நடப்பிப்பதாக அங்கிகரித்திருக்கிறார். (யோவான் 5:19,30).
26. தம்முடைய சொந்த சித்தத்தை செய்வதற்கு வராமல், பிதாவின் சித்தத்தைச் செய்வதற்குப் பிதாவானவர் தம்மை அனுப்பியிருப்பதாக இயேசு கிறிஸ்து அங்கிகரித்திருக்கிறார். (யோவான் 5:30).
27. இயேசு கிறிஸ்துவின் உபதேசம் அவருடையதல்ல. பிதாவினுடையது. (யோவான் 7:16-17).
28. இயேசு கிறிஸ்து தாமாக ஒன்றும் பேசாமல், தம்மை அனுப்பின பிதாவுக்குரிய காரியங்களையே பேசினார். (யோவான் 7:16-18).
29. இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே பிரியப்படுத்தாமல், பிதாவானவரையே பிரியப்படுத்தினார். (யோவான் 8:29).
30. தேவனுடைய குடும்பத்தில் இயேசு கிறிஸ்து குமாரனாக இருக்கிறார். பிதாவாக இல்லை. (யோவான் 8:35-36)
31. பிதாவானவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். (யோவான் 8:16,35-44).
32. இயேசு கிறிஸ்து பிதாவைக் கனம் பண்ணுகிறார். (யோவான் 8:49).
33. இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த மகிமையைத் தேடாமல் பிதாவின் மகிமையைத் தேடுகிறார். (யோவான் 8:50-54).
34. இயேசு கிறிஸ்து பிதாவை அறிந்திருந்தார். ஆனால் இயேசு கிறிஸ்து பிதாவல்ல. (யோவான் 8:55).
35. பிதாவானவர் இயேசுவினிடத்தில் அன்பாயிருந்தார். (யோவான் 10:17-18).
36. இயேசு கிறிஸ்து பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டார். (யோவான் 12:49-50)
37. பிதாவானவர் இயேசு கிறிஸ்துவிற்கு அவருடைய சீஷர்களைக் கொடுத்தார். (யோவான் 10:29).
38. ஒருசில காரியங்களில் இயேசு கிறிஸ்து பிதாவோடு சமமாக இருந்தாலும், எல்லாக் காரியங்களிலும் சமமாக இல்லை. (மாற்கு 13:32)
39. இயேசு கிறிஸ்துவும், பிதாவும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்தார்கள். விசுவாசிகளும் தேவனிடத்திலும், ஒருவருக்கொருவரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். (யோவான் 10:38).
40. பிதாவிடத்திற்குச் செல்வதற்கு இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே வழி. (யோவான் 6:37).
41. தம்முடைய குமாரத்துவத்திற்குத் தாம் மட்டும் சாட்சி பகராமல், பிதாவானவரும் சாட்சி பகர்ந்திருப்பதாக இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். (யோவான் 5:36-38).
42. தாம் பிதாவல்ல என்றும், தேவத்துவத்தில் தாம் ஒரு ஆள்தத்துவப் பண்புடையவர் என்றும் இயேசு கிறிஸ்து 80க்கும் மேற்பட்ட வசனங்களில் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். (மத் 7:21)
43. பிதாவைப்போல இயேசு கிறிஸ்து பெரியவரல்ல. (யோவான் 10:29).
44. பிதா (மத் 3:17), இயேசு (யோவான் 10:36), தேவதூதர்கள் (லூக்கா 1:32-35), பிசாசுகள் (மாற்கு 3:11), அப்போஸ்தலர்கள் (மத் 16:16) ஆகிய அனைவருமே இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவத்தைக் குறித்து சாட்சி பகர்ந்திருக்கிறார்கள். இவர்களில் யாருமே இயேசுவைப் பிதா என்று ஒருமுறை கூட சாட்சி கூறியதில்லை.
45. பிதாவும், குமாரனும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் சம்பாஷணை செய்திருக்கிறார்கள். இந்த சம்பாஷணையைப் பலர் தங்கள் காதுகளால் தெளிவாகக் கேட்கின்றார்கள். (மத் 3:16-17).
46. பிதாவையும், குமாரனையும் குறிப்பதற்கு ""இருவரும்'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்விருவரும் வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்கள் என்பதை இந்த வார்த்தை நிரூபிக்கிறது. (யோவான் 15:24)
47. பிதாவையும், குமாரனையும் குறிப்பதற்கு ""கூட'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்விருவரும் வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்கள் என்பதை இந்த வார்த்தை நிரூபிக்கிறது. (யோவான் 5:19,27)
48. ""அவர்கள் பிதாவையும், என்னையும் அறியாதபடியினால்'' என்னும் வாக்கியம் இவ்விருவரும் வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்கள் என்பதை நிரூபிக்கிறது. (யோவான் 16:3,5).
49. இயேசு கிறிஸ்து வானத்திலும், பூமியிலும் எல்லா அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். (மத் 28:18). பிதாவானவர் இந்த அதிகாரத்தை இயேசு கிறிஸ்துவிற்குக் கொடுத்திருக்கிற படியினால் அவர் இயேசுவைவிட அதிகாரத்தில் பெரியவராக இருக்க வேண்டும். (யோவான் 14:28).
50. பிதாவானவர் இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்தார். அவரை வானத்திற்கு உயரே எடுத்துக் கொண்டார். ஆகையினால் பிதாவும், குமாரனும் ஒருவரல்ல. (எபே 1:20-23)
51. தேவன் இயேசு கிறிஸ்துவைக் கர்த்தரும், கிறிஸ்துவுமாக்கினார். (அப் 2:33-36).
52. யோவான் தான் எழுதிய சுவிசேஷத்தில் ஆறு இடங்களில் இயேசு கிறிஸ்து பிதாவல்ல என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறார். (யோவான் 14:1-9)
பரிசுத்த ஆவியானவர் இயேசுவோ அல்லது பிதாவோ அல்ல என்பதற்குச் சான்றுகள்
1. பரிசுத்த ஆவியானவர் ஒரு தனி ஆள்தத்துவப் பண்புடைய நபர். பிதா, குமாரன் ஆகிய இருவரிடமிருந்து வேறுபட்டிருக்கிறவர். (யோவான் 5:32)
2. பரிசுத்த ஆவியானவர் வருவதற்கு இயேசு கிறிஸ்து எடுத்துக் கொள்ளப்படுவது அவசியமாக இருந்தது. (யோவான் 16:5-15).
3. பிதா, குமாரன் ஆகியோரிடமிருந்து பரிசுத்த ஆவியானவர் வேறுபட்ட நபராக இருப்பதை இயற்கையான கண்களினால் காணமுடிந்திருக்கிறது. (மத் 3:16-17)
4. சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிதாவிற்கு முன்பாக பரிசுத்த ஆவியானவரும், இயேசு கிறிஸ்துவும் தனித்தனி ஆள்தத்துவப் பண்புடையவர்களாக இருப்பதை வேதம் விளக்கி கூறுகிறது. (வெளி 1:4-5)
5. இயேசுகிறிஸ்து மகிமையடையும் வரையிலும் தேவன் பரிசுத்த ஆவியானவரை அனுப்பவில்லை. அதன் பின்பு ஆவியானவரை பிதாவும், குமாரனும் அனுப்பினார்கள். (யோவான் 7:37-39)
6. இயேசு கிறிஸ்துவை வல்லமையினால் அபிஷேகம் பண்ணுவதற்கு பிதாவானவர் பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். இந்த நிகழ்ச்சிக்கு மூன்று நபர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவர் அனுப்புகிறவர். மற்றொருவர் அனுப்பப் படுகிறவர். மற்றும் ஒருவர் பெற்றுக் கொள்கிறவர். (அப் 10:38)
7. திரித்துவத்தின் மூன்று நபர்களுக்கும் வெவ்வேறு நாமங்கள் கொடுக்கப் பட்டிருக்கிறது. (மத் 28:19)
8. ஜெபம் பண்ணும்பொழுது மூன்று நபர்களுக்கும் இடையிலுள்ள தனித் தன்மைகள் வெளிப்படுகிறது. குமாரன் ஜெபிக்கிறார். பிதாவினிடத்தில் ஜெபிக்கிறார். பரிசுத்த ஆவியானவருக்காக ஜெபிக்கிறார். (யோவான் 14:16).
9. தேவனுடைய வலதுபாரிசத்தில் குமாரன் அமர்ந்திருக்கிறார். ஆகையினால் குமாரனுடைய இடதுபாரிசத்தில் பிதா அமர்ந்திருக்கிறார். பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறார்கள். (அப் 2:33-36)
10. பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்படுவதற்கு முன்பாகவே (யோவான் 7:39) பிதாவானவர் குமாரனை அனுப்பினார். (யோவான் 3:16)
11. இயேசு கிறிஸ்துவிற்கு எதிரான தூஷணம் மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணம் மன்னிக்கப்படாது. (மத் 12:31-32)
12. பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்காத சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். (அப் 8:5-25).
13. இயேசு தாமாகவே அற்புதங்கள் செய்யவில்லை. (யோவான் 5:19) பரிசுத்த ஆவியானவர் மூலமாக கிறிஸ்து அற்புதங்களைச் செய்தார். (யோவான் 2:11)
14. பரிசுத்த ஆவியானவர் தம்மைப் பற்றி அறிக்கையிடுவதற்கோ, தம்மை மகிமைப் படுத்துவதற்கோ வராமல், இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிக்கையிடுவதற்கும், இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதற்கும் வந்தார். (யோவான் 16:7-15).
15. பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு இறங்கி வந்ததினால், இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறி பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருப்பது நிரூபணமாகிறது. (அப் 2:33-34)
16. உயிர்த்தெழுந்த பின்புகூட இயேசுகிறிஸ்து தம்மை ஒரு ஆவியென்று அங்கிகரிக்க வில்லை. (லூக்கா 24:39)
17. வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் திரித்துவத்தின் மூவரும் எல்லாக் காரியங்களிலும் இணைந்து கிரியை நடப்பிப்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. (வெளி 1:4-6).
ஆவி, ஜலம், இரத்தம் 1யோவா 5:8
1யோவா 5:8. பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
பரலோகத்திலே இயேசுகிறிஸ்துவைக்குறித்து பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் சாட்சியிடுகிறார்கள். இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். இம்மூவரோடு சேர்ந்து, பூலோகத்திலே, ஆவி, ஜலம், இரத்தம் ஆகிய மூன்றும் இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சியிடுகிறது. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
இம்மூன்று சாட்சிகளில் முதலாவதாக சாட்சி ஆவியின் சாட்சி. ஆத்துமாக்கள் மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுவது, மறுபடியும் புதுப்பிக்கப்படுவது ஆகிய சம்பவம் இரட்சகருக்கு சாட்சியாயிருக்கிறது. இந்தச் சாட்சி பூமியிலிருக்கிறது. சபையிலே இன்னும் ஆத்துமாக்கள் புதுப்பிக்கப்படுகிறார்கள். இன்னும் மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுகிறார்கள். சபையிலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆவியானவர் ஆத்துமாக்களை புதுப்பிக்கிறார். மறுஜென்மமாக்குகிறார். ஆத்துமாக்களுக்குள் மனமாற்றத்தை உண்டாக்குகிறார். இவையெல்லாம் சபையில் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிற ஊழியம். மறுஜென்மமாக்கும் ஊழியத்தோடு, பரிசுத்த ஆவியானவர் ஆத்துமாக்களை பரிசுத்தப்படுத்துகிறார். தொடர்ந்து பரிசுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார். விசுவாசிகள் உலகத்தை ஜெயிக்கிறார்கள்.
பூமியிலே இயேசுகிறிஸ்துவைப்பற்றி இரண்டாவதாக சாட்சியிடுவது ஜலம். ஜலம் நம்முடைய இரட்சிப்பின் உபாயமாக இருக்கிறது. இந்த ஜலம் இரட்சகராகிய இயேசுறிஸ்துவைக்குறித்து சாட்சியாக அறிவிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் பரிசுத்தத்தையும் சுத்திகரிக்கும் வல்லமையையும் ஜலம் சாட்சியாக அறிவிக்கிறது. யோவான்ஸ்நானன் இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சி கொடுத்தார். யோவான்ஸ்நானன் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் கொடுத்தார். ஜலத்தினால் ஆத்துமாக்கள் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்து ஞானஸ்நான நியமத்தை ஸ்தாபித்திருக்கிறார். நாம் இரட்சிக்கப்படும்போது, ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சாட்சியாக அறிவிக்கிறோம்.
இயேசுகிறிஸ்துவைக்குறித்து பூலோகத்திலே சாட்சியிடுகிற மூன்றாவது சாட்சி இரத்தமாகும். இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையிலேயே சிந்திய அவருடைய திருஇரத்தம் அவரைக் குறித்து சாட்சிகொடுக்கிறது. கிறிஸ்து தம்முடைய இரத்தத்தை நம்மை மீட்கும் கிரயமாகச் செலுத்தினார். தேவன் நம்மீது காண்பிக்கிற ஒப்பில்லாத அன்பை கிறிஸ்துவின் இரத்தம் சாட்சியாய் அறிவிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்பட்டவர்கள் அவருக்கு சாட்சியாக ஜீவிக்கிறார்கள். பாடுகளும் வேதனைகளும், உபத்திரவங்களும் வந்தாலும் அவற்றை இயேசுகிறிஸ்துவினிமித்தமாய் பொறுமையோடு சகித்துக்கொள்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாய் மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவும், அவருடைய ராஜ்யமும் இந்தப் பூமிக்குரியதல்ல. இயேசுகிறிஸ்து கர்த்தருடைய பந்தியை நியமனம்பண்ணியிருக்கிறார். தம்முடைய மாம்சத்தையும், இரத்தத்தையும் கர்த்தருடைய பந்தியில் சாட்சியாய் அறிவிக்கிறார். பூலோகத்திலே ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளாகிய இம்மூன்றும், இயேசுகிறிஸ்து ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் இந்தப் பூமிக்கு வந்தவர் என்பதை சாட்சியிடுகிறது. இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. இம்மூன்றும் ஒன்றுக்கொன்று ஒன்றாயிருக்கிறது.
இயேசுகிறிஸ்துவின் மனுஷத்துவம் குமாரத்துவம் ஆகியவற்றிற்கு மூன்று சாட்சிகள்
1. இயேசு கிறிஸ்து தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவியானவர் அவர்மீது வந்திறங்கி சாட்சி பகர்ந்தார். (மத் 3:13-17)
2. ஜலம்
3. இரத்தம் - இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவருடைய மனுஷத்துவத்தையும், குமாரத்துவத்தையும் குறித்து சாட்சிபகருவதோடு பாவத்திலிருந்து மனுக்குலத்திற்கு மீட்பையும் உறுதி பண்ணுகிறது. (மத் 26:28)
ஜலம் - சாட்சியிடுகிற விதம்
1. தண்ணீர் ஞானஸ்நானம் - இயேசு கிறிஸ்துவின் மரணம், அவர் அடக்கம் பண்ணப்படுதல், அவருடைய உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு அடையாளம். (மத் 3:13-17)
2. ஜீவத்தண்ணீராகிய வார்த்தை - இயேசு கிறிஸ்துவின் மனுஷ அவதாரத்திற்குச் சாட்சி பகருகிறது. (ஏசா 7:14)
3. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படும்போது வடிந்த தண்ணீரும், இரத்தமும் அவருடைய மனுஷத்துவத்திற்குச் சாட்சி பகருகிறது. (யோவான் 19:34)
ஆவி, ஜலம், இரத்தம் ஆகிய மூன்று சாட்சிகளும் இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவத்தையும், மனுஷத்துவத்தையும் அங்கிகரித்து சாட்சி பகருவதில், ஒன்றுபட்டிருக்கிறது. (1யோவான் 4:1-6)
தேவனுடைய சாட்சி 1யோவா 5:9
1யோவா 5:9. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சி கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து இந்தப்பூமிக்கு ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தரென்று பிதாவானவர் சாட்சி கொடுக்கிறார். தேவனுடைய சாட்சி அதிகாரமுள்ளது. வல்லமையுள்ளது. தேவன் சாட்சி கொடுக்கும்போது, அதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.
இயேசுகிறிஸ்துவைக்குறித்து மனுஷரும் சாட்சி கொடுக்கிறார்கள். மனுஷருடைய சாட்சியைவிட தேவனுடைய சாட்சியே வல்லமையானது. இதுவே மேன்மையானது. மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறவர்கள் தேவனுடைய சாட்சியையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய சாட்சி மனுஷருடைய சாட்சியைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கிறது. தேவன் தம்முடைய தெய்வீக அதிகாரத்தினால் சாட்சிகொடுக்கிறார். தேவனுடைய சாட்சியில் தவறு எதுவும் இருப்பதில்லை.
தேவன் பொய்யுரையாதவர். அவர் சத்தியமுள்ளவர். அவர் சத்திய வார்த்தைகளை மாத்திரமே பேசுகிறவர். இயேசுகிறிஸ்துவைப்பற்றி தேவன் கொடுக்கிற சாட்சிகளெல்லாம் சத்தியமாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவே தம்முடைய குமாரன் என்று பிதாவானவர் இந்த உலகத்திற்குக் கொடுக்கிற சாட்சி போதுமான சாட்சியாயிருக்கிறது. தேவனுடைய சாட்சியைவிட வேறு எந்த சாட்சியும் இதற்கு மேல் மனுஷருக்குத் தேவையில்லை. இயேசுகிறிஸ்து தேவனுடைய அன்பின் குமாரன். மனுஷரை தேவனிடத்தில் ஒப்புரவாக்குவதற்காக இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்தார். இந்தப் பூமியிலே கிறிஸ்துவானவர் தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்த ஊழியம் செய்து, நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார். கிறிஸ்தவ உபதேசத்திற்கு, இயேசுகிறிஸ்துவைக்குறித்து, பிதாவானவர் கொடுத்த சாட்சியே அஸ்திபாரமாயிருக்கிறது. தேவனிடத்தில் நம்மைச் சேர்ப்பதற்கு கிறிஸ்துவே வழியாகவும், வாசலாகவும் இருக்கிறார்.
மனுஷருடைய சாட்சியை விட தேவனுடைய சாட்சி உறுதியானது. மனுஷன் மனம் மாறக்கூடியவன். தேவனோ நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். ஆகையினால் தமது குமாரனைக் குறித்து பிதாவானவர் கொடுக்கும் சாட்சி மனுஷருடைய எல்லாச் சாட்சிகளையும் விட மேன்மையானது.
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் 1யோவா 5:10
1யோவா 5:10. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனைக்குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார். தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்கள், அந்தச் சாட்சியை தங்களுக்குள்ளே கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைக்குறித்து விசுவாசிகள் வெளிப்படையாகவும் சாட்சி சொல்லுகிறார்கள். அவரைக் குறித்த சாட்சியை தங்கள் இருதயத்திலும் பெற்றிருக்கிறார்கள். தங்களுடைய ஆத்துமாக்களுக்கு இயேசுகிறிஸ்து செய்த நன்மைகளுக்கு விசுவாசிகள் சாட்சிகளாகயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவில் தாங்கள் கண்டதற்கும், கண்டுகொண்டதற்கும் விசுவாசிகள் சாட்சிகளாகயிருக்கிறார்கள்.
விசுவாசிகளிடத்தில் இயேசுகிறிஸ்து உருவாகியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக விசுவாசிகள் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி பெறுகிறார்கள். விசுவாசிகள் பரலோகத்திலே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான பரிபூரண நிலமையிலிருப்பார்கள்.
ஒரு சிலர் தேவனை விசுவாசிப்பதில்லை. இவர்கள் தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சியையும் விசுவாசிக்கமாட்டார்கள். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதையும் விசுவாசிக்கமாட்டார்கள். பிதாவானவர் மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இயேசுகிறிஸ்துவை கிருபாதாரபலியாக இந்த உலகத்திற்கு அனுப்பினார் என்பதையும் விசுவாசிக்கமாட்டார்கள். தேவன் தம்முடைய குமாரனை குறித்து கொடுத்த சாட்சியை இவர்கள் விசுவாசியாததினால், இந்த அவிசுவாசிகள் தேவனையும், அவருடைய குமாரனையும் பொய்யராக்குகிறார்கள்.
ஒவ்வொரு விசுவாசியும் தன்னுடைய விசுவாசத்திற்கு தேவனிடமிருந்து தனிப்பட்ட சாட்சியை உடையவனாக இருக்கிறான். ஒவ்வொரு அவிசுவாசியும் தேவனை மறுதலிப்பதினால் உண்டாகும் பலனைப் பட்டனுபவிப்பார்கள்.
நித்திய ஜீவன் 1யோவா 5 : 11-13
1யோவா 5:11. தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
1யோவா 5:12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
1யோவா 5:13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். இதுவே சுவிசேஷத்தின் மொத்த சாரம். பிதாவாகிய தேவன். இயேசுகிறிஸ்துவைக்குறித்து கொடுத்த சாட்சியினால், நமக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கிறது. நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கவேண்டுமென்பது தேவனுடைய திட்டம். அவர் நமக்காகவே நித்திய ஜீவனை ஏற்படுத்தியிருக்கிறார்.
நித்திய ஜீவன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறது. இயேசுகிறிஸ்துவே நமக்கு நித்திய ஜீவனாயிருக்கிறார். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் என்று யோவான் எழுதுகிறார். நாம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாய்ச் சேரும்போது, நித்திய ஜீவனோடும் ஐக்கியமாய்ச் சேருகிறோம். நம்மிடத்தில் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து இல்லையென்றால், நாம் நித்திய ஜீவனில்லாதவர்கள்.
இயேசுகிறிஸ்துவே நித்திய ஜீவனாயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறவர்கள் அவருடைய நித்திய ஜீவனையும் மறுதலிக்கிறார்கள். தங்களுக்கு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியையும் மறுதலிக்கிறார்கள். நமக்குள் தேவனுடைய குமாரன் இல்லையென்றால், நமக்கு நித்திய ஜீவனுமில்லை.
நமக்குள் நித்திய ஜீவன் உண்டென்று நாம் அறியவேண்டும். தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நாம் விசுவாசமாயிருக்கவேண்டும். தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நித்திய ஜீவன் மூலமாய் நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அநேகம் உண்டு. நித்திய ஜீவன் நமக்கு ஆறுதலையும் திருப்தியையும் தரும். நித்திய ஜீவனை உடைய விசுவாசிகள் மாத்திரமே கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பார்கள். தங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்பதையும் அறிந்திருப்பார்கள்.
நித்திய ஜீவனைப்பற்றிய அறிவு விசுவாசிகளுக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நித்திய ஜீவனை உடையவர்கள் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருப்பார்கள். இவர்களுடைய பரிசுத்தமான விசுவாசம் நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும். இவர்களுடைய விசுவாசம் கர்த்தருக்குள் உறுதியாயிருக்கும்.
கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவேண்டும். தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கிற நித்திய ஜீவனைக் காத்துக்கொள்ளவேண்டும். தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் காத்துக்கொள்ளவில்லையென்றால், நமக்கு பேரிழப்பு உண்டாகும்.
இயேசு கிறிஸ்துவிலுள்ள நித்திய ஜீவன் ஒரு மிகப்பெரிய சத்தியமாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோரும், தண்ணீர், இரத்தம் ஆகியவையும் இந்தச் சத்தியத்திற்குச் சாட்சி பகருகின்றன.
நித்திய ஜீவன் இயேசு கிறிஸ்துவில் மட்டுமே உள்ளது. இயேசு கிறிஸ்துவில் இருக்கிறவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை உடையவர்கள்.
இயேசு கிறிஸ்துவிலுள்ள ஆசீர்வாதங்கள்
1. ஆக்கினைத்தீர்ப்பில்லை. (ரோமர் 8:1)
2. பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலை. (ரோமர் 8:2)
3. தேவனுடைய அன்பு. (ரோமர் 8:39)
4. உண்மை (ரோமர் 9:2)
5. ஒரே சரீரத்தில் ஒற்றுமை. (ரோமர் 12:5)
6. ஞானம், நீதி, பரிசுத்தமாதல், மீட்பு. (1கொரி 1:30)
7. சரீர உயிர்த்தெழுதல். (1கொரி 15:22)
8. வெற்றி சிறக்கப்பண்ணுதல். (2கொரி 2:14)
9. நியாயப்பிரமாணம் ஒழிந்துபோதல்.
10. புதிய சிருஷ்டி (2கொரி 5:17)
11. எளிமை (2கொரி 11:3)
12. சுயாதீனம் (கலா 2:4)
13. குமாரத்துவம். (கலா 3:26)
14. தேவனுக்குச் சமீபமாதல். (எபே 2:13)
15. பரம அழைப்பு (பிலி 3:14)
16. விசுவாசமும், அன்பும். (1தீமோ 1:14)
17. கிருபை (2தீமோ 2:1)
18. இரட்சிப்பு (2தீமோ 2:10)
19. நித்திய ஜீவன். (1யோவான் 5:11)
20. காக்கப்படுதல். (யூதா 1:1)
யோவான் இவைகளை எழுதியிருப்பதற்குக் காரணங்கள்
1. நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும். (1யோவான் 2:3)
2. தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும்.
தேவனுடைய சித்தம் 1யோவா 5 : 14,15
1யோவா 5:14. நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
1யோவா 5:15. நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களுக்கு தெய்வீக ஆசீர்வாதம் உண்டு. விசுவாசமுள்ள ஜெபங்களை கர்த்தர் செவிகொடுத்து கேட்கிறார். நாம் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக விசுவாசத்தோடும், பயபக்தியோடும் வரலாம். தம்முடைய கிருபாசனத்தண்டையில் வருவதற்கு கர்த்தர் நம்மைப் பலப்படுத்துகிறார்.
நாம் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணும்போது, தேவன் நம்முடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் அங்கீகரிக்கிறார். நம்முடைய ஜெபத்தில் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று நாம் நினைக்கக்கூடாது. நமக்கு தேவனுடைய சித்தம் என்ன என்பது தெரிந்திருக்கவேண்டும். நாம் தேவனுடைய சித்தத்தின்படியே அவரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்.
நாம் எதையாகிலும் தேவனுடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்கு செவிகொடுக்கிறார். இதை நாம் அறிந்திருக்கவேண்டும். இந்த விசுவாசமே கர்த்தரிடத்தில் நாம் கொண்டிருக்கிற தைரியம். கர்த்தருடைய சித்தத்தின்படி நாம் ஜெபம்பண்ணும்போது, பரலோகத்திலிருக்கிற கர்த்தர் நம்முடைய ஜெபங்களுக்கு செவிகொடுத்து, நாம் வேண்டிக்கொண்டவற்றை நமக்குத் தருகிறார்.
தேவனுடைய சித்தத்தின்படி நாம் எதை கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுப்பார். அவரிடத்தில் நாம் கேட்டவைகளை நிச்சயமாகவே பெற்றுக்கொள்வோம். விசுவாசிகளாகிய நாம், தேவன் நம்முடைய ஜெபத்திற்குச் செவிகொடுப்பாரென்பதையும், பதில்கொடுப்பாரென்பதையும் அறிந்திருக்கவேண்டும். நம்முடைய ஜெபம் தேவனுடைய சமுகத்தில் கேட்கப்பட்டாலே, நாம் கேட்டவைகளை பெற்றுக்கொண்டோம் என்பதுதான் பொருள். தேவனால் கேட்கப்பட்ட ஜெபம், நம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஜெபமாயிருக்கிறது.
வேண்டுதல் செய்யக்கடவோம் 1யோவா 5 : 16,17
1யோவா 5:16. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
1யோவா 5:17. அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நமக்காகவும் ஜெபிக்கவேண்டும். மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். பாவங்களில் வித்தியாசமுண்டு என்று யோவான் எழுதுகிறார். இரண்டுவிதமான பாவங்களைப்பற்றி இங்கு சொல்லுகிறார். அவையாவன : 1. மரணத்திற்கேதுவல்லாத பாவம். 2. மரணத்திற்கேதுவான பாவம்.
நம்முடைய சகோதரர்கள் மரணத்துக்கேதுவல்லாத பாவத்தைச் செய்யும்போது நாம் அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டும். கர்த்தர் நம்முடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பார். மனுஷரை அழித்துப்போடவேண்டுமென்பது தேவனுடைய விருப்பமல்ல. நாம் இரட்சிக்கப்படவேண்டுமென்பதும், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்பதுமே தேவனுடைய விருப்பம். நம்மை இரட்சிப்பதற்காகவே தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்தில் அனுப்பினார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மரணத்திற்கேதுவல்லாத எல்லா பாவங்களையும் மன்னிப்பார்.
மரணத்திற்கேதுவான பாவமும் உண்டு. ஒருவன் மரணத்திற்கேதுவான பாவம் செய்தால், நாம் அவனுக்காக ஜெபிக்கவேண்டுமென்று யோவான் புத்திசொல்லவில்லை. ""மரணத்திற்கேதுவான பாவமுண்டு, அதைக் குறித்து வேண்டுதல் செய்ய நான் சொல்லேன்'' என்று யோவான் எழுதுகிறார். அவபக்தியுள்ளவர்களும், அவிசுவாசிகளும் மரணத்திற்கேதுவான பாவங்களைச் செய்கிறார்கள்.
அநீதியெல்லாம் பாவம்தான். மரணத்திற்கேதுவான பாவம் செய்கிறவர்களுக்கு ஆவிக்குரிய மரணமுண்டாகும். இவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் பரிசுத்தமாயிராது. தாறுமாறாகயிருக்கும். இவர்களுடைய ஜீவியத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருக்காது. சந்தோஷமோ, சமாதானமோ இவர்களிடத்தில் இருக்காது. இவர்கள் மரணத்திற்கேதுவான பாவங்களைச் செய்கிறவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சரீரப்பிரகாரமான மரணமும் வரும். ஆவிக்குரிய மரணமும் வரும்.
நாம் தேவனிடத்தில் ஜீவனைக் கேட்கும்போது அவர் நமக்கு ஜீவனைக் கொடுப்பார். தேவன் ஜீவனுள்ளவர். நம்முடைய ஜீவனை தேவனிடமிருந்து கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். மரணத்திற்கேதுவல்லாத பாவத்தை செய்கிற சகோதரர்களுக்காக நாம் ஜெபிக்கலாம். அப்படிப்பட்ட சகோதரருக்காக விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் ஜெபம்பண்ணலாம். கர்த்தர் நம்முடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, அந்தச் சகோதரருக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பார்.
ஒரு சிலர் மரணத்திற்கேதுவான பாவத்தைச் செய்கிறார்கள். இவர்களுக்காக வேண்டுதல்செய்ய யோவான் நமக்கு ஆலோசனை சொல்லவில்லை. மரணத்திற்கேதுவான பாவங்களை செய்கிறவர்களுக்கு யோவானிடத்தில் ஆறுதலான வார்த்தையில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு பிரயோஜனமான வாக்குத்தத்தம் எதுவும் யோவானிடத்திலில்லை.
பாவத்தின் சம்பளம் மரணம். சுவிசேஷத்தின் மூலமாய் நமக்கு இரட்சிப்பு வாக்குப்பண்ணப்பட்டிருப்பதுபோல, மரணமும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. நாம் கர்த்தருடைய சமுகத்தில் கருத்தாய் ஜெபிக்கும்போது பாவத்தின் சம்பளமாகிய மரணதண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். மற்ற சகோதரர்கள் மரணத்திற்குகேதுவல்லாத பாவத்தைச் செய்யும்போது நாம் அவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யலாம். அப்போது அவர்களுடைய பாவம் மன்னிக்கப்படும். மரணம் அவர்களுக்கு நேரிடாது. கர்த்தர் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பார்.
மரணத்திற்கேதுவான பாவங்களை செய்கிறவர்களுக்காகவும் நாம் ஜெபம்பண்ணலாம். பக்தியில்லாதவர்களும் அவபக்தியுள்ளவர்களும் மரணத்திற்கேதுவான பாவங்களைச் செய்கிறவர்கள். இவர்களுடைய பாவங்கள் இவர்களுக்கு மன்னிக்கப்படவேண்டும் என்று நாம் ஜெபம்பண்ணலாம். இவர்கள் மனந்திரும்ப வேண்டுமென்று நாம் ஜெபம்பண்ணலாம். கிறிஸ்துவில் இவர்கள் வைக்க விசுவாசம் வேண்டும் என்றும் நாம் ஜெபம்பண்ணலாம். தேவனுடைய இரட்சிக்கும் கிருபைகள் இவர்களுக்குக் கிடைக்கவேண்டுமென்றும் நாம் ஜெபிக்கலாம்.
நாம் எல்லோருமே பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகயிருக்கிறோம். பாவத்தின் சம்பளம் மரணம். அநீதியெல்லாம் பாவம் தான். நாமெல்லோருமே மரணத்திற்கு பாத்திரவான்களாயிருக்கிறோம். ஆனால் நம்முடைய பாவம் மரணத்திற்கேதுவான பாவமாயிருக்கக்கூடாது. விசுவாசிகள் இதில் மிகுந்த கவனத்தோடிருக்கவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் கவனக்குறைவாகயிருப்போமென்றால், நாம் மரணத்திற்கேதுவான பாவத்தைச் செய்துவிடுவோம். நம்மிடத்தில் விசுவாசமும் தேவபக்தியும் இருக்காது. கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கவேண்டும். அப்போதுதான் நமக்கு இரட்சிப்பும் நித்திய ஜீவனும் உண்டு.
தேவனால் பிறந்தவர் 1யோவா 5 : 18-20
1யோவா 5:18. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
1யோவா 5:19. நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
1யோவா 5:20. அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய சிலாக்கியங்கள் அநேகம் உண்டு. தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான். அவன் பாவம் செய்யமாட்டான். மரணத்திற்கேதுவான பாவம் எதையும் செய்துவிடாதவாறு, தேவனால் பிறந்தவன் தன்னைக் காத்துக்கொள்கிறான். தேவனால் பிறந்தவர்களிடத்தில் புதிய சுபாவம் இருக்கும். தேவஆவியானவர் இவனுக்குள் வாசம் செய்வார். மரணத்திற்கேதுவான பாவத்தை செய்யாதவாறு தேவஆவியானவர் அவனைப் பாதுகாப்பார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை பொல்லாங்கன் தொடமாட்டான். சத்துருவின் மூலமாய் நமக்கு ஆபத்து உண்டாகாது. நம்மை அழிக்கவேண்டுமென்று பிசாசு முயற்சி செய்தாலும், தேவனுடைய பாதுகாப்பு நமக்கு அரணாகயிருக்கும். தேவனால் பிறந்திருக்கிற நாம் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். தேவனால் பிறந்த எவரும் பாவம் செய்யமாட்டார்கள் என்பதையும் நாம் அறிந்திருக்கவேண்டும். மறுபடியும் பிறந்திருக்கிற நாம் நம்முடைய ஆவிக்குரிய ஸ்தானத்திற்கேற்ற பிரகாரமாய் நடந்துகொள்ளவேண்டும். மறுஜென்மமுள்ளவர்களாய் ஜீவிக்கவேண்டும்.
தேவனால் பிறந்திருக்கிற நமக்கு தேவன் தம்முடைய தெய்வீக வல்லமையைக் கொடுத்திருக்கிறார். இந்த வல்லமையினால் நாம் நம்மைக் காத்துக்கொள்கிறோம். பொல்லாங்கன் நம்மைத் தொடாதவாறு நாம் மிகுந்த எச்சரிப்போடு ஜீவிக்கிறோம். மரணத்திற்கேதுவான பாவத்தைச் செய்யாதபடி நம்மைப் பாதுகாக்க, தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற தெய்வீக வல்லமையை நாம் அறிந்திருக்கவேண்டும். அந்த வல்லமையைப் பயன்படுத்தி நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம். இந்த முழுஉலகமுமோ பொல்லாங்கனுக்குள் அடிமைப்பட்டு கிடக்கிறது. மனுஷரை இரண்டு ஜாதியாகப் பிரிக்கலாம். ஒரு ஜாதியார் தேவனால் உண்டாயிருக்கிறவர்கள். மற்றொரு ஜாதியார் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறவர்கள் விசுவாசிகளாகிய நாமோ தேவனுக்குரியவர்கள். தேவனால் உண்டாயிருக்கிறவர்கள். நாம் தேவனிடத்திலிருந்து உண்டானவர்கள். தேவனுக்கு உண்டானவர்கள். தேவனால் உண்டானவர்கள்.
உலகத்தாரோ பொல்லாங்கனுக்குள் கிடக்கிறார்கள். அவர்கள் துன்மார்க்கத்தில் ஜீவிக்கிறார்கள். நம்முடைய தேவன் தம்முடைய தெய்வீக வல்லமையினால் பொல்லாங்கனுடைய கோட்டையைத் தகர்த்தெறிகிறார். பொல்லாங்கனுக்குள் கிடக்கிற ஆத்துமாக்களை விடுவித்து, தம்முடைய ராஜ்யத்திற்குள் அழைத்துவருகிறார்.
தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்தார். சுவிசேஷ வசனத்தின் மூலமாய் நாம் இயேசுகிறிஸ்துவைக் காண்கிறோம். அவருடைய உபதேசத்தைக் கேட்கிறோம். அவருடைய சத்தியத்தை அறிந்துகொள்கிறோம். கிறிஸ்துவானவர் தம்மைக்குறித்த வெளிப்பாடுகளை நமக்கு வெளிப்படுத்துகிறார். அந்தத் தெய்வீக வெளிப்பாடுகளை நாம் அறிந்துகொள்கிறோம். தேவனுடைய திவ்விய சுபாவங்களை நாம் புரிந்துகொள்கிறோம்.
நம்முடைய தேவன் சத்தியமுள்ளவர். நாம் அவரை அறிந்துகொள்வதற்கு நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்கள் தேவை. தெளிந்த புத்தி தேவை. தேவனை அறிவதற்கு, தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து நமக்குத் தெளிந்த புத்தியைத் தந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து நமக்குத் தந்திருக்கிற தெய்வீக புத்தியினாலேயே, நாம் சத்தியமுள்ள தேவனை அறிந்திருக்கிறோம். சத்தியமுள்ள தேவனை அறிந்திருப்பது நமக்கு கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம். இயேசுகிறிஸ்துவில் நாம் சத்தியமுள்ளவரை அறிந்திருக்கிறோம். இயேசுகிறிஸ்து சத்தியமுள்ளவராகவும் இருக்கிறார். அவரே நித்திய ஜீவனாகவும் இருக்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தேவனோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிறோம். இயேசுகிறிஸ்துவே சத்தியமுள்ளவர். கிறிஸ்துவானவர் நம்மை பிதாவினிடத்திற்கு வழிநடத்திச் செல்லுகிறார். நாமோ பிதாவுக்குள்ளும், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிறோம். இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். நாம் இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, மெய்யான தேவனுக்குள்ளும், நித்திய ஜீவனுக்குள்ளும் இருக்கிறோம்.
விக்கிரகங்கள் 1யோவா 5:21
1யோவா 5:21. பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
இந்தப் பிரபஞ்சத்தில் புறஜாதியாரின் தெய்வங்கள் ஏராளமுள்ளன. நாம் மெய்யான தேவனை அறிந்திருக்கிறோம். நாம் இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். நம்மிடத்திலுள்ள கிறிஸ்துவின் ஒளியும், தேவஅன்பும் நம்மைப் பாதுகாக்கவேண்டும். புறஜாதியாரின் தெய்வங்களைவிட்டு நாம் விலகிப்போய்விடவேண்டும். நாம் அறிந்திருக்கிற தேவன் சத்தியமுள்ளவர். பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினால் நம்மை இரட்சித்திருக்கிறார். நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். நம்முடைய தேவன் மெய்யான தேவன். அவரை நாம் விசுவாசத்தோடும் அன்போடும் பற்றிக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு நாம் பூரணமாய்க் கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். விக்கிரகங்களுக்கு விலகி நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ஜீவனுள்ள தேவன். அவரே மெய்யான தேவன். மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கே துதி கன மகிமை உண்டாவதாக. ஆமென்.