1 யோவான் அதிகாரம் 3 விளக்கம்

தேவன் நம்மை தம்முடைய பிள்ளைகள் என்று அழைத்து நமக்கு அன்பு பாராட்டுகிறார் (1யோவா 3:1,2). தேவன் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, நாமும் நம்மை சுத்திகரித்துக்கொள்ளவேண்டும் (1யோவா 3:3). தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் (1யோவா 3:4-10). நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும் (1யோவா 3:11-18). நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக சுத்தமாயிருக்கவேண்டும் (1யோவா 3:19-22). இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் நாம் விசுவாசமுள்ளவர்களாயிருக்கவேண்டும் (1யோவா 3:23). நாம் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும் (1யோவா 3:24).

அ. தேவனுடைய பிள்ளைகள் 1யோவா 3:1

1யோவா 3:1. நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். தேவன் நம்முடைய பரலோகப்பிதாவாயிருக்கிறார். தேவன் நம்மை தம்முடைய பிள்ளைகள் என்று அழைப்பது நமக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். அவர் நம்மை தம்முடைய பிள்ளைகள் என்று அழைத்து, நமக்கு பெரிதான அன்பு பாராட்டியிருக்கிறார். அப்போஸ்தலர் யோவான் இந்தச் சத்தியத்தைச் சொல்லும்போது, ""தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்'' என்று சொல்லுகிறார்.

நம்முடைய தேவன் நித்திய பிதாவாகயிருக்கிறார். அவர் நமக்கு பெரிதான அன்பு பாராட்டுகிறார். அவர் தம்முடைய அன்பினாலேயே நம்மை தம்முடைய பிள்ளைகள் என்று அழைக்கிறார். கர்த்தர் பரிசுத்தர். நாமோ அசுத்தர். ஆனாலும் அவர் நம்மை தம்முடைய பிள்ளைகளென்றும், தம்மை நம்முடைய பிதவானவர் என்றும் அழைப்பதற்கு வெட்கப்படவில்லை.

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம். இது விசுவாசிகளின் மேன்மை. ஆனால் இந்த உலகமோ நம்முடைய மேன்மையையும், மகிமையையும் அறியவில்லை. உலகம் தேவனை அறியாதபடியினாலே, நம்மையும் அறியவில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நமக்கு நித்திய சந்தோஷம் உண்டு. நம்முடைய சந்தோஷம் உலகத்தாருக்குத் தெரியவில்லை. உலகத்தாரின் பார்வையில் நாம் அற்பமானவர்களாகயிருக்கிறோம். இந்த உலகத்தாரின் பார்வையில் நாம் சாதாரண ஜனங்களாகயிருந்தாலும், கர்த்தருடைய பார்வையிலோ பரலோகத்தின் மேன்மைகளைச் சுதந்தரிக்கிற விசேஷித்த பிள்ளைகளாகயிருக்கிறோம்.

இந்த உலகத்தாருக்கு இந்த உலகத்தைப்பற்றி மாத்திரமே தெரியும். வரப்போகிற பரலோகத்தைப்பற்றி அவர்களுக்குத் தெரியாது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இந்தப் பிரபஞ்சம் நித்திய வாசஸ்தலமல்ல. பரலோகமே நம்முடைய நித்திய வாசஸ்தலம். நம்முடைய பிதாவானவர் நம்மை, ""தேவனுடைய பிள்ளைகள்'' என்று அழைக்கிறார். நமக்கு அன்பு பாராட்டுகிறார். ஆனால் இந்த உலகத்தாரோ நம்மீது கோபமாகயிருக்கிறார்கள். நமக்குச் சத்துருக்களாகயிருக்கிறார்கள்.

நாம் இந்தப் பூமியிலே அந்நியரைப்போலவும், பரதேசிகளைப்போலவும் சஞ்சரிக்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இந்த உலகத்திலே உபத்திரவங்கள் உண்டு. பரலோகத்தின் சுதந்தரத்தையும் மேன்மையையும் நோக்கிப் பார்த்து, இந்தப் பூமியிலே நமக்கு வருகிற பாடுகளையும், வேதனைகளையும், உபத்திரவங்களையும் பொறுமையோடு சகித்துக்கொள்ளவேண்டும். இந்த உலகத்தார் நம்மை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் கர்த்தரையும் அறிந்துகொள்ளவில்லை. ஆகையினால்தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அவர்கள் சிலுவையில் அறைந்து துன்பப்படுத்தினார்கள். கர்த்தரைத் துன்பப்படுத்துகிறவர்கள், நம்மையும் துன்பப்படுத்துகிறார்கள். நமக்குத் துன்பம் வரும்போது, கர்த்தருடைய பிள்ளைகள் அதைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடாது. அது ஏதோ புதுமையென்று நினைத்து திகைக்கக்கூடாது.

மனுஷருடைய தகுதியை எண்ணிப் பார்க்காமல் பிதாவானவர் மனுக்குலத்தின்மீது அதிகமாக அன்பு பாராட்டியிருக்கிறார். புத்திரசுவிகாரத்தினால் நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரேபேறான குமாரன். இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய ஒரேபேறான குமாரனென்று உலகம் அங்கிகரிக்கவில்லை. ஆகையினால் நம்மையும், தேவனுடைய பிள்ளைகள் என்று இந்த உலகம் அங்கிகரிக்காது.

ஆ. தேவனுக்கு ஒப்பாயிருப்போம் 1யோவா 3:2

1யோவா 3:2. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

தேவனுக்கும் நமக்கும் இடையே பரிசுத்த ஐக்கியம் இருக்கிறது. தெய்வீக உறவு நமக்குள்ளே இருக்கிறது. நாம் இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. கர்த்தர் நம்முடைய ஸ்தானத்தின் மேன்மையையும், கனத்தையும் நமக்கு ஓரளவு வெளிப்படுத்தியிருக்கிறார். நம்முடைய மேன்மையான ஆசீர்வாதங்களில் இன்னும் சிலவற்றை அவர் இன்னும் நமக்கு வெளிப்படுத்தவில்லை. விசுவாசிகளுடைய மேன்மையான ஸ்தானத்தையும், ஆசீர்வாதத்தையும், கனத்தையும் பற்றி அப்போஸ்தலர் யோவான் இங்கு தெளிவுபடுத்துகிறார்.

கர்த்தருக்குள் மறுபடியும் பிறந்திருக்கிற விசுவாசிகளெல்லோரும் தேவனுடைய பிள்ளைகளாகயிருக்கிறார்கள். இது தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற மகிமையான உறவு. இந்தப் பிரபஞ்சத்தில் கர்த்தர் நம்மை தம்முடைய பிள்ளைகள் என்று அழைக்கிறார். அவர் நம்முடைய பரலோகப் பிதாவாகயிருக்கிறார். இந்தப்பிரபஞ்சத்தில் கர்த்தர் நம்மோடு ஏற்படுத்திக்கொண்ட இந்தத் தெய்வீக உறவை, பரலோகத்திலும் காத்துக்கொள்கிறார். இங்கு நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக இருப்பதுபோல, பரலோகத்திலும் கர்த்தருடைய பிள்ளைகளாகயிருப்போம்.

தேவனுடைய பிள்ளைகள் விசுவாசத்தில் நடக்கவேண்டும். நம்பிக்கையில் ஜீவிக்கவேண்டும். கர்த்தர் மறுபடியும் வருவார். அவர் வெளிப்படும்போது, நாம் இனிமேல் எவ்விதமாயிருப்போம் என்று நமக்கு வெளிப்படுத்தப்படும். இப்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகயிருக்கிறோம். இனிமேல் நாம் எப்படியிருப்போம் என்பதை, கர்த்தர் வெளிப்படும்போது நமக்கு வெளிப்படுத்துவார்.

கர்த்தர் வெளிப்படும்போது, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய தலையாகிய கிறிஸ்து இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். அவருடைய சாயலுக்கு ஒப்பாகயிருப்போம். கர்த்தர் வெளிப்படும்போது, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம்.

கர்த்தர் வெளிப்படும்போது எல்லோரும் அவரை தரிசிப்பார்கள். விசுவாசிகளும் அவிசுவாசிகளும் கர்த்தரைத் தரிசிப்பார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் மாத்திரமே, அவர் வெளிப்படும்போது, அவர் இருக்கிற வண்ணமாகவே அவரைத் தரிசிப்பார்கள். நாம் பரலோகத்திற்குரியவர்கள். நமக்கு மாத்திரமே இப்படிப்பட்ட மேன்மையான சிலாக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கர்த்தர் வெளிப்படும்போது துன்மார்க்கரும் அவரைத் தரிசிப்பார்கள். அவரைப் பார்த்து பயந்து நடுங்குவார்கள். கர்த்தர் வெளிப்படும்போது துன்மார்க்கரை நியாயந்தீர்க்கிற நியாயாதிபதியாக அவர் அவர்களுக்கு வெளிப்படுவார். அவர்களுடைய துன்மார்க்கத்தினிமித்தம் அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவராக கர்த்தர் தம்மை வெளிப்படுத்துவார். கர்த்தருடைய பரிசுத்த சுபாவமும், துன்மார்க்கருடைய துன்மார்க்கமான சுபாவமும் ஒத்துப்போகாது. தேவனுடைய சாயலும் துன்மார்க்கருடைய சாயலும் ஒத்திருப்பதில்லை.

தேவனுடைய பிள்ளைகளாகிய நாமோ, கர்த்தர் வெளிப்படும்போது, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். அவருடைய மகிமை நிறைந்த முகத்தைத் தரிசிப்போம். அவருடைய பிரகாசமுள்ள முகத்தைத் தரிசிப்போம். நாமும் அவருக்கு ஒப்பாயிருப்போம். நம்முடைய சாயலும் தேவனுடைய சாயலும் ஒப்பாயிருப்பதினால் பரலோகத்தில் தேவனைத் தரிசிப்பதுபோலவே, அவர் இந்தப் பூமிக்கு மறுபடியும் வரும்போது அவரை தரிசிப்போம்.

இ. தேவன் சுத்தமுள்ளவர் 1யோவா 3:3

1யோவா 3:3. அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

நம்முடைய தேவன் சுத்தமுள்ளவர். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் சுத்தமுள்ளவர்களாயிருக்கவேண்டும். நாம் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய பரிசுத்தத்தை அறிந்திருக்கிறோம். நாம் கர்த்தரோடு ஜீவிக்கப்போகிறோம் என்று விசுவாசிக்கிறோம். நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்றும், பரலோகத்திலே கர்த்தரோடு நித்தியகாலமாய் ஜீவிக்கப்போகிறவர்கள் என்றும் நாம் விசுவாசிக்கிறோம்.

கர்த்தர் வெளிப்படும்போது, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம் என்றும், அவருக்கு ஒப்பாயிருப்போமென்றும் அறிந்திருக்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய பரிசுத்தத்திலும் அவருக்கு ஒப்பாயிருக்கவேண்டும். பரலோகத்தைக் குறித்த நம்பிக்கை நம்மை பாவத்திலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும். நம்முடைய தேவன் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும்.

இப்பிரபஞ்சத்தில் விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் வித்தியாசமுண்டு. கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கும் துன்மார்க்கருக்கும் வித்தியாசமுண்டு. துன்மார்க்கர் இந்தப் பூமியிலே பாவத்தில் ஜீவிக்கிறார்கள். அவர்களுடைய இருதயத்தில் அசுத்தம் நிரம்பியிருக்கிறது. நாமோ விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையினாலேயே நம்மை சுத்திகரித்துக்கொள்ளவேண்டும். விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிற நாம், அதே விசுவாசத்தினாலே நம்மை சுத்திகரித்துக்கொள்ளவும் வேண்டும்.

இயேசு கிறிஸ்து சபையை எடுத்துக் கொள்ளுவதற்காக வருவார் என்று நம்புகிறவர்கள் கிறிஸ்து சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தங்களையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறார்கள்.

A. நாம் இந்த ஜீவியத்தில் சுத்தமுள்ளவராய் இருக்க முடியும் என்பதற்குச் சான்றுகள்

1. கிறிஸ்து தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். (மத் 1:21).

2. இது பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தமாயிருக்கிறது. (மத் 26:28)

3. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி பிழைப்போம். (ரோமர் 6:2)

4. நாம் இனி பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப் பட்டதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 6:6).

5. நீங்கள் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். (ரோமர் 6:11).

6. நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. (ரோமர் 6:12).

7. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற படியால், பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது. (ரோமர் 6:14-23).

8. பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப் பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். (ரோமர் 6:18)

9. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின்பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. (ரோமர் 8:1-4)

10. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். (கலா 5:16,24).

11. தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு........ தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். (எபே 1:4).

12. நாம் அவபக்தியையும் வெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணவேண்டும். (தீத்து 2:12).

13. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம். (எபி 1:3; எபி 9:14)

14. நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. (1பேதுரு 1:16).

15. அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1யோவான் 1:7,9).

16. இயேசு கிறிஸ்துவிற்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும். (1யோவான் 2:6).

17. இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை. அவரை அறியுமில்லை...... நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். (1யோவான் 3:6-7).

18. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். (1யோவான் 3:8-10; யோவான் 8:44).

19. தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். (1யோவான் 4:17; 1யோவான் 5:4-5,18).

20. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. (எபி 12:14-15).

இ. பாவம் 1யோவா 3 : 4-6

1யோவா 3:4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

1யோவா 3:5. அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

1யோவா 3:6. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.

அப்போஸ்தலர் யோவான் பாவத்தைக் குறித்து எச்சரிக்கிறார். பாவத்தின் கிரியைகள் அந்தகாரத்தின் கிரியைகளாயிருக்கிறது. நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். ஒருவன் பாவம் செய்யும்போது தேவனுடைய தெய்வீக பிரமாணத்தை மீறி அதைப் புறக்கணித்துப்போடுகிறான். தேவனுடைய தெய்வீக அதிகாரத்தையும் புறக்கணித்துவிடுகிறான். அதன் தொடர்ச்சியாக, அவன் தேவனையும் புறக்கணித்துவிடுகிறான். தேவனை மறுதலித்துவிடுகிறான்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக இந்த உலகத்திலே வெளிப்பட்டார். தேவனிடத்தில் பாவமில்லை. அவர் நம்மை தமக்கு ஒப்பாக மாற்றுகிறார். அவர் வெளிப்படும்போது, அவர் இருக்கிற வண்ணமாகவே, நாம் அவரைத் தரிசிப்பதினால், நம்முடைய பரிசுத்தத்தில், நாம் அவருக்கு ஒப்பாயிருப்போம். கிறிஸ்துவோடு ஐக்கியமாகயிருக்கவேண்டுமென்று விரும்புகிறவர்கள் பரிசுத்தமாயிருக்கவேண்டும். தேவனிடத்தில் பாவமில்லை. நம்மிடத்திலும் பாவம் இருக்கக்கூடாது. நம்முடைய கர்த்தர் சுத்தமுள்ளராயிருக்கிறதுபோல, விசுவாசத்தினாலே நாமும் நம்மை சுத்திகரித்துக்கொள்ளவேண்டும்.

இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை. கர்த்தரிடத்தில் நிலைத்திருக்கிறவர்கள், அவருடைய உடன்படிக்கையிலும் நிலைத்திருப்பார்கள். அவருடைய ஒளியிலும், அவரை அறிகிற அறிவிலும் நிலைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒருவரும் பாவம் செய்யமாட்டார்கள். பாவம் செய்கிற எவனும் கிறிஸ்துவைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. நாம் பாவத்தை வெறுத்து பரிசுத்தமாய் ஜீவிப்பதே, கிறிஸ்துவைப்பற்றும் அறிவு நம்மிடத்தில் இருக்கிறது என்பதற்கு மெய்யான சாட்சியாயிருக்கிறது.

பாவம் செய்கிறவன் நியாயப்பிரமாணத்தை மீறுகிற படியினால் அவனுக்கு மரண ஆக்கினை உண்டாயிருக்கிறது.

B. மனுஷனிலுள்ள பாவத்தின் அம்சங்கள்

1. நியாயப்பிரமாணத்தை மீறுதல். (1யோவான் 3:4)

2. பாவிகளிடத்தில் பிசாசானவனுடைய ஆவியும், சுபாவமும். (2கொரி 5:17)

கிறிஸ்துவானவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டார். ஆகையினால் நம்மிடத்தில் இன்னும் பாவம் காணப்படுமானால் நம்முடைய பாவங்களுக்காக நாம் இன்னும் மெய்யாக மனம் வருந்தி நம்முடைய பாவங்களை இயேசு கிறிஸ்துவினிடத்தில் அறிக்கையிட வில்லை என்பதே பொருள்.

பாவஞ்செய்கிற எவனும் இயேசுகிறிஸ்துவைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. பரிசுத்தவான்களுக்கும், பாவிகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு இதுதான். பரிசுத்தவான்கள் தேவனை அறிகிறார்கள். அவரைக் காண்கிறார்கள். பாவிகளுக்கு இது சித்திக்கவில்லை.

C. சுவிசேஷத்தின் தெளிவான சத்தியங்கள்

1. இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார். (1யோவான் 3:5)

2. இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறவன் பாவம் செய்கிறதில்லை. அதாவது பாவம் செய்கிறவன் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்கவில்லை. (1யோவான் 3:5-6)

3. இயேசு கிறிஸ்து நீதியுள்ளவராயிருக்கிறது போல மனுஷரும் இந்த ஜீவியத்தில் நீதியுள்ளவராயிருக்க முடியும். (1யோவான் 3:7)

4. பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான். (1யோவான் 3:8)

5. பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கு இயேசு கிறிஸ்து வெளிப்பட்டார். (1யோவான் 3:8)

6. தேவனுடைய வித்து ஒருவனுக்குள் தரித்திருக்கிற வரையிலும் அவன் பாவம் செய்யமாட்டான். (1யோவான் 3:9)

7. எல்லோரும் தேவனுடைய பிள்ளைகளல்ல. (1யோவான் 3:10).

ஈ. நீதியைச் செய்கிறவன் 1யோவா 3:7

1யோவா 3:7. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

நீதியைச் செய்கிறவர்கள் மாத்திரமே நீதியுள்ளவர்களாயிருக்கிறார்கள். நீதியைச் செய்வதற்கும், நீதியுள்ளவராயிருப்பதற்கும் தொடர்பு உள்ளது. பாவம் செய்கிறவர்கள் அநீதியுள்ளவர்களாயிருப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை யாரும் வஞ்சித்துவிடக்கூடாது. நீதியை செய்வதினிமித்தமாய் நமக்குத் துன்பம் வரலாம். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்றும் பரலோக ராஜ்யம் அவர்களுடையது என்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு உபதேசம் செய்திருக்கிறார் (மத் 5:10).

நீதியைச் செய்வதே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவது. கிறிஸ்து நீதியுள்ளவராயிருக்கிறார். அவருடைய பிரமாணமும் நீதியுள்ளதாயிருக்கிறது. கிறிஸ்து நீதியுள்ளவராயிருக்கிறதுபோல, அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நீதியைச் செய்து, நீதியுள்ளவர்களாயிருக்கவேண்டும். நம்முடைய மனச்சாட்சி சுத்தமுள்ளதாயிருக்கவேண்டும். அது நீதிக்குக் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். நாம் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருக்கவேண்டும். நம்மிடத்தில் நீதியும் உண்மையும் இல்லையென்றால், பிசாசு நம்மை எளிதாக வஞ்சித்துவிடுவான்.

உ. பாவம்செய்கிறவன் 1யோவா 3:8

1யோவா 3:8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

பாவிக்கும் பிசாசுக்கும் ஐக்கியம் இருக்கிறது. பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான். பிசாசானவன் ஆதிமுதல் பாவம் செய்கிறான். பாவம் செய்கிறவர்கள் சாத்தானுக்கு அடிமைகளாகயிருக்கிறார்கள். சாத்தானுடைய சுபாவமே பாவிகளை ஆளுகை செய்கிறது. ஆகையினால் பாவம் செய்கிறவன் எவனும் பிசாசினால் உண்டாயிருக்கிறான்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறார். பிசாசும் இயேசுகிறிஸ்துவுக்கு சத்துருவாகயிருக்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே வெளிப்பட்டார். சாத்தானை ஜெயிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்தார். இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலும் வல்லமையினாலும் பாவம் அழிந்துபோகும். சாத்தானுடைய கிரியைகள் அழிந்துபோகும். பிசாசினுடைய கிரியைகளை இயேசுகிறிஸ்து முற்றிலுமாக அழித்துப்போடுவார். எந்தக் கிரியைகளை அழிக்கும்படிக்கு இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்தாரோ, அந்தக் கிரியைகளுக்கு நாம் பங்காளிகளாகயிருக்கக்கூடாது. அந்தக் கிரியைகளை நாம் செய்யவும் கூடாது.

ஊ. தேவனால் பிறந்தவன் 1யோவா 3 : 9,10

1யோவா 3:9. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

1யோவா 3:10. இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.

இரட்சிக்கப்பட்டவர்கள் மறுபடியும் பிறந்திருக்கிறார்கள். நம்முடைய மறுபிறப்புக்கும், நாம் பாவத்தைவிட்டு விலகி ஜீவிப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது. நாம் தேவனால் மறுபடியும் பிறந்திருக்கிறோம். தேவனால் பிறந்திருக்கிறவர்கள் எவரும் பாவம் செய்யமாட்டார்கள். தேவனால் பிறப்பது என்னும் வாக்கியத்திற்கு, நம்முடைய உள்ளான மனுஷனில் புதுப்பிக்கப்படுவது என்று பொருள். தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நம்முடைய உள்ளான சுபாவத்தை பரிசுத்தப்படுத்துவது என்றும் இதற்கு பொருள் சொல்லலாம்.

தேவனுடைய வித்து தேவனால் பிறந்தவர்களுக்குள் தரித்திருக்கிறது. ஆகையினால் தேவனால் பிறந்தவர்கள் பாவம் செய்யமாட்டார்கள். தேவன் தம்முடைய கிருபையை நமக்குள் புதுப்பிக்கிறார். அவருடைய கிருபை நமக்குள் வாசம்பண்ணுகிறது. கிறிஸ்துவின் உபதேசங்களை நாம் சாதுரிய வார்த்தைகளினால் பிரசங்கம் செய்தால் மாத்திரம் போதாது. அவருடைய உபதேசத்திற்கு நாம் கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும்.

கிறிஸ்தவ மார்க்கம் என்பது ஒரு வாழும் கலையல்ல. இது நாம் வாழவேண்டிய மார்க்கம். நம்முடைய சுயஞானத்தினால் அல்லது சுயதிறமையினால் நம்மால் கிறிஸ்துவுக்குப் பிரியமானவர்களாக ஜீவிக்க முடியாது. நம்முடைய சுபாவம் புதுப்பிக்கப்படவேண்டும். நாம் மறுபடியும் பிறக்கவேண்டும். நாம் தேவனால் மறுபடியும் பிறக்கவேண்டும். நம்முடைய உள்ளான மனுஷன் புதுப்பிக்கப்படவேண்டும்.

மறுபடியும் பிறந்தவர்கள் மாத்திரமே கர்த்தருக்குப் பிரியமாக ஜீவிப்பார்கள். நாம் மறுபடியும் பிறப்பதினால் பாவசுபாவம் நம்மைவிட்டு நீங்கிப்போகிறது. பாவம் செய்யவேண்டும் என்னும் ஆசையும் நம்மிடத்திலிருந்து ஒழிந்துபோகிறது. இதனால் தேவனால் பிறந்தவர்கள் எவரும் பாவம் செய்யமாட்டார்கள்.

தேவனால் பிறந்தவர்களுக்குள் தேவனுடைய வித்து தரித்திருக்கிறது. ஆகையினால் அவர்களால் பாவம் செய்யவும் முடியாது. பாவத்தில் தொடர்ந்து ஜீவிக்கவும் முடியாது. அவர்கள் தேவனால் பிறந்திருக்கிறார்கள் என்பதே இந்த மாற்றத்திற்கு காரணம். தேவனால் பிறந்தவர்களுடைய மனதில் தேவனுடைய ஒளி பிரகாசமாக இருக்கும். இந்த வெளிச்சத்தில் அவர்கள் பாவத்தின் அசுத்தத்தையும், துன்மார்க்கத்தின் அலங்கோலத்தையும் தெளிவாகப் பார்ப்பார்கள். தேவனுடைய வெளிச்சம் நம்முடைய பாதைக்கு தீபமாயிருக்கிறது.

தேவனால் பிறந்தவர்களுடைய இருதயம் புதுப்பிக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட இருதயத்தில் புதுப்பிக்கப்பட்ட சுபாவம் வாசம்பண்ணுகிறது. இதுவரையிலும் அவர்களுடைய இருதயத்தில் இருந்த பாவமான சுபாவங்களும், பாவமான கிரியைகளும் அங்கிருந்து வெளியேறிப்போகிறது. அவருடைய இருதயத்தில் ஆவிக்குரிய மாற்றம் உண்டாகிறது. சுவிசேஷ வசனம் விசுவாசியின் இருதயத்தைப் புதுப்பிக்கிறது. சுத்திகரிக்கிறது. நம்முடைய இருதயமும், சிந்தையும், ஆவியும் பாவத்திற்கு விரோதமாகத் திரும்பவேண்டும். பாவத்தை வெறுக்கவேண்டும். அப்போதுதான் நாம் பாவம் செய்யாமலிருப்போம். மறுபடியும் பிறந்திருக்கிறவர்களுக்குள் மாத்திரமே இப்படிப்பட்ட மாற்றம் உண்டாகும்.

மறுபடியும் பிறந்திருக்கிறவர்களை தேவனுடைய ஆவியானவர் ஆளுகை செய்கிறார். தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக ஆவியானவர் இரட்சிக்கப்பட்டவர்களை மாற்றுகிறார். தம்முடைய விருப்பத்தின் பிரகாரமாக அவர்களை உருவாக்குகிறார். மறுபடியும் பிறக்காதவர்களையோ அவர்களுடைய சுயஆவி ஆளுகை செய்கிறது. சுயஆவியினால் நம்முடைய பாவத்தை ஜெயிக்கமுடியாது. பாவத்தை ஜெயிப்பதற்கு பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசை நமக்குத் தேவை. மறுபடியும் பிறக்காதவர்களால் நன்மை செய்யமுடியாது. நன்மையைப் பற்றிக்கொள்ள முடியாது. இவர்களால் நீதியைச் செய்யமுடியாது. மறுபடியும் பிறக்காதவர்கள் தங்களுடைய மாம்ச சுபாவத்திற்கு அடிமையாகி பாவம் செய்கிறார்கள். மறுபடியும் பிறந்தவர்களோ தேவனால் பிறந்திருக்கிறார்கள். ஆனபடியினாலே இவர்கள் பாவம் செய்யமாட்டார்கள்.

இந்தப்பிரபஞ்சத்தில் தேவனுடைய பிள்ளைகளுக்கும் பிசாசின் பிள்ளைகளுக்கும் வித்தியாசமுண்டு. பாவம் செய்யாமல் நீதியைச் செய்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகள். இவர்கள் தங்கள் சகோதரரிடத்தில் அன்புகூருவார்கள். பிசாசின் பிள்ளைகளுடைய சுபாவம் தேவனுடைய பிள்ளைகளின் சுபாவத்திற்கு நேர்விரோதமாகயிருக்கும். பிசாசின் பிள்ளைகள் நீதியைச் செய்யமாட்டார்கள். பாவம் செய்வார்கள். தங்கள் சகோதரரிடத்தில் அன்புகூரமாட்டார்கள். இவர்கள் தேவனால் உண்டானவர்களல்ல. இவர்களிடத்தில் தேவனுடைய சாயலும், அவருடைய சுபாவமும் இருப்பதில்லை.

தேவனால் பிறந்தவர்களுக்குள் தேவனுடைய வித்து இருக்கிறது. பிசாசின் பிள்ளைகளிடத்தில் சாத்தானுடைய வித்து இருக்கிறது. சாத்தான் ஒருபோதும் நீதியைச் செய்யமாட்டான். அவன் நீதியைப் பகைக்கிறவன். சாத்தான் தேவனை பகைக்கிறவன். தேவனுடைய பிள்ளைகளையும் பகைக்கிறவன். பிசாசின் பிள்ளைகளிடத்தில் பிசாசின் சுபாவமே இருக்கும்.

C. பிசாசினுடைய கிரியைகள்

1. பாவம் - கலகம்பண்ணுதல். (ஆதி 3)

2. இருளின் கிரியைகள் (எபே 5:11)

3. துர்க்கிரியைகள். (கொலோ 1:21)

4. ஆவிக்குரிய குருட்டுத்தன்மை. (2கொரி 4:4)

5. தேவனுடைய வார்த்தையைத் திருடுதல். (மத் 13:19)

6. வஞ்சிப்பதும், கள்ளமார்க்கங்களும். (2கொரி 11:14)

7. கொல்வதும், அழிப்பதும். (யோவான் 10:10)

8. களைகளை விதைப்பது, தேவனுடைய பரிசுத்தவான்களைச் சோதிப்பது (மத் 4:3)

9. மாயமான ஆராதனை செய்வதும், மாயமான அற்புதங்கள் நடப்பிப்பதும். (2தெச 2:8-12)

10. புயற்காற்றும், பெருங்காற்றும் அடிப்பதற்குக் காரணமாக இருப்பது. (யோபு 1:18-19)

11. தேசங்களை ஆளுகை செய்வது. (மத் 4:8-9)

12. மரணத்தை உண்டுபண்ணுவது. (எபி 2:14-15)

13. சகோதரரைக் குற்றப்படுத்துவது. (வெளி 12:10)

14. ஜெபத்தைத் தடைபண்ணுவது. (தானி 10:12-21)

15. சுவிசேஷத்திற்கு எதிர்த்து நிற்பது. (எபே 6:1-18)

16. பிசாசுகள் (யோவான் 12:31), விழுந்துபோன தூதர்கள் (வெளி 12:7-12), விழுந்து போன மனுஷர்கள் (எபே 2:2) ஆகியோரை வழிநடத்துவது.

17. வியாதியையும், நோய்களையும் வருவிப்பது. (மத் 4:23-24)

18. பலவீனங்களை உண்டாக்குவது. (மத் 8:17)

19. சந்திரரோகத்தை வருவிப்பது. (மத் 4:23-24)

20. தற்கொலை பண்ணுவதற்கு தூண்டுவது. (மத் 17:15)

21. ஆசை இச்சைகளைக் கொடுப்பது. (யோவான் 8:44)

22. பொய்சொல்வதும், கள்ளத் தீர்க்கதரிசனமும். (1இராஜா 22)

23. தவறான உபதேசங்களைப் பரப்புவது. (1தீமோ 4)

24. மனுஷரை ஒடுக்குவது. (அப் 10:38)

25. விசுவாசிகளைத் துன்புறுத்துவதும், விசுவாசிகள்மீது ஆவிக்குரிய யுத்தங்களை வருவிப்பதும். (எபே 6:10-18)

சாத்தானுடைய சகல அந்தகாரக் கிரியைகளையும் அழித்து அவமாக்குவதற்காக இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்தார். தற்காலத்திலும் இயேசு கிறிஸ்துவின் திருஇரத்தத்தினால் விசுவாசிகள் சாத்தானை மேற்கொண்டு தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் ஜெயம்பெற முடியும். ஆயிரம் வருஷ அரசாட்சியில் சாத்தானுடைய பாவமான கிரியைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விடும்.

D. புதிய பிறப்பு

1. ஆவிக்குரிய மாற்றம் - சரீர மாற்றமல்ல. (கலா 4:29)

2. இருதயம், சித்தம், சிந்தனை, ஆவல்கள், ஜீவன், நடத்தை ஆகியவற்றில் மாற்றம் - சரீரத்தில் ஏற்படும் மாற்றமல்ல. (2கொரி 5:17-18)

3. எஜமான்களை மாற்றுவது - சரீரம், ஆத்துமா, ஆவியை மாற்றுவதல்ல. (ரோமர் 6:11-23)

4. சாத்தானின் குடும்பத்திலிருந்து தேவனுடைய குடும்பத்திற்குள் சுவிகார புத்திரராக அங்கீகரிக்கப்படுவது (ரோமர் 8:14-16)

5. சாத்தானுக்கும், பாவத்திற்கும் ஊழியம் செய்வதற்குப் பதிலாகத் தேவனுக்கும், பரிசுத்தத்திற்கும் ஊழியம் செய்யுமாறு தன்னைப் பிரதிஷ்டை பண்ணுவது. (ரோமர் 6:16-22)

6. தன்னுடைய நீதியிலும், பரிசுத்தத்திலும் புதுப்பித்துக் கொள்வது. (எபே 4: 23-24) புதிய பிறப்பு என்பது பரிசுத்த ஆவியினால் பிறப்பதைக் குறிக்காது. தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியினால் பிறந்தார். (யோவான் 1:14,18)

7. சுபாவத்தின் மாற்றம் (ரோமர் 3:24-25)

8. ஆர்வத்தின் மாற்றம் - தேவனுடைய சமூகத்திற்கு முன்பாகப் புதிய பிரதிஷ்டையோடு நிற்பது. (ரோமர் 5:1-2)

9. சுபாவம், ஊழியம், ஸ்தானம் ஆகியவற்றில் மாற்றம். (கலா 5:22-23)

10. ஒருபாவி மனந்திரும்பி இரட்சிக்கப் படும்போது அவருடைய ஜீவியத்தில் ஏற்படும் ஆவிக்குரிய மாற்றங்களும், சுபாவங்களின் மாற்றங்களும் (மாற்கு 1:15) இரட்சிக்கப்பட்ட நபர் மறுபடியும் பாவம் செய்யும்போது தேவனுடைய பிரமாணத்தை அவர் மீறுகிறார். அவருக்குப் பாவத்தின் சம்பளமாகிய மரணம் நியமிக்கப் படுகிறது. (யாக் 1:13-15)

D. 1யோவான் 3:9 ஆவது வசனத்தைக் குறித்துக் கூறப்படும் தவறான கருத்துக்கள்

1. மறுபடியும் பிறந்து இரட்சிக்கப் பட்டிருக்கிறவரால் பாவமே செய்ய முடியாது.

2. இரட்சிக்கப்பட்டவர்கள் செய்யும் பாவங்கள் உண்மையிலேயே பாவங்கள் அல்ல.

3. இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்தாலும் அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடாமலேயே அவர்களுடைய பாவங்களைத் தேவன் தாமாகவே மன்னித்து விடுவார்.

4. இரட்சிக்கப்பட்டவர்கள் செய்யும் பாவங்களைத் தேவனே நோக்கிப் பார்ப்பதில்லை. அவர்கள் நம்பும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மட்டுமே தேவன் பார்ப்பார்.

5. பாவங்கள் இரட்சிக்கப்பட்டவர்களை ஒன்றும் செய்யாது.

6. இரட்சிக்கப்பட்டவர்கள் பாவத்திற்கு அடிமையாக மாட்டார்கள். எப்போதாவது பாவம் செய்வார்கள்.

7. இரட்சிக்கப்பட்டவர்களுடைய கடந்தகால, நிகழ்கால, வருங்கால பாவங்கள் அனைத்தையும் தேவன் ஏற்கெனவே மன்னித்து விட்டார்.

ஒரு மனுஷன் தேவனால் மறுபடியும் பிறக்கிறான். (1பேதுரு 1:23; யாக் 1:18). அவன் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்கும் வரையில் பாவம் செய்யமாட்டான். தேவனுடைய கற்பனைகளை மீறமாட்டான். பாவத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்க மறுத்துவிடுவான். ஒருதரம் இரட்சிக்கப்பட்டவன் தேவனுடைய சமுகத்திலிருந்து விலகிச்செல்லும்போது அவனுடைய ஆவிக்குரிய ஜீவியம் குளிர்ந்து விடுகிறது. தேவனிடத்தில் ஜெபம் பண்ணுவதைக் குறைத்துவிடுகிறான். பாவம் அவனை மேற்கொள்கிறது. பாவத்திற்கு அடிமையாகிவிடுகிறான்.

E. ஜனங்களில் இருபிரிவினர்

1. தேவனுடைய பிள்ளைகள்

2. பிசாசின் பிள்ளைகள்

F. பிசாசின் பிள்ளைகளுக்கு அடையாளங்கள்

1. இருளில் நடக்கிறான். (1யோவான் 1:5-6; 1யோவான் 2:11)

2. தன்னிடத்தில் பாவம் இல்லை என்கிறான். (1யோவான் 1:8,10)

3. தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாமலும், தேவனைப் பிரியப் படுத்தாமலும் ஜீவிக்கிறான். (1யோவான் 2:3-4)

4. கிறிஸ்து நடந்தபடியே நடக்காமல் இருக்கிறான். (1யோவான் 2:6)

5. தன் சகோதரனைப் பகைக்கிறான். (1யோவான் 2:9)

6. சாத்தானை ஜெயிக்காமல் இருக்கிறான். (1யோவான் 2:13-14)

7. உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூருகிறான். (1யோவான் 2:15-17)

8. கிறிஸ்தவ ஐக்கியத்தை விட்டுப் பிரிந்து விடுகிறான். (1யோவான் 2:19)

9. சத்தியத்தை அறியாதிருக்கிறான். (1யோவான் 2:20-27)

10. தேவனையும், இயேசுவையும் மறுதலிக்கிறான். (1யோவான் 2:22-23)

11. அநீதியைச் செய்கிறான். (1யோவான் 2:29)

12. தன்னைச் சுத்திகரித்துக் கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறான். (1யோவான் 3:3)

13. பாவம் செய்கிறான். (1யோவான் 3:8-10)

14. கொலைசெய்கிறான். (1யோவான் 3:12,15)

15. தேவையுள்ளவர்களுக்கு இரங்காமல் தன் இருதயத்தை அடைத்துக் கொள்கிறான். (1யோவான் 3:17)

16. விசுவாசித்தில் குறைவுள்ளவனாய் இருக்கிறான். (1யோவான் 3:20-22)

17. பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள் வாசம்பண்ணவில்லை. (1யோவான் 3:24)

18. உலகத்திற்குரியவனாகவும், உலகத்தோடு ஐக்கியமுள்ளவனாகவும் இருக்கிறான். (1யோவான் 4:5)

19. தேவனைப் பற்றியும், நித்திய ஜீவனைப் பற்றியும் எந்த ஞானமும் இல்லாதவனாய் இருக்கிறான். (1யோவான் 4:7-10)

20. இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிக்கை செய்வதில்லை. (1யோவான் 4:14-18)

21. உலகம் இவனை ஜெயிக்கிறது. (1யோவான் 5:4-5)

உ. ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும் 1யோவா 3 : 11-13

1யோவா 3:11. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.

1யோவா 3:12. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போ-ருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

1யோவா 3:13. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தேவனிடத்தில் அன்புகூரவேண்டும். தேவஅன்பு நம்மிடத்தில் நிரம்பியிருக்கவேண்டும். நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூருவதுபோலவே, அவருடைய பிள்ளைகளிடத்திலும் அன்புகூரவேண்டும். நம்முடைய கர்த்தரும் தம்முடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறார். நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பது தேவனுடைய பிரமாணம். இது புதிய பிரமாணமல்ல. இந்தப் பிரமாணத்தை ஆதிமுதல் சுவிசேஷமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் காயீன் என்பவன் இருந்தான். இவன் பொல்லாங்கனால் உண்டானவன். தன் சகோதரன் ஆபேலைக் கொலைசெய்தவன். கர்த்தருடைய பிள்ளைகள் காயீனைப்போல இருக்கக்கூடாது. இவனே சர்ப்பத்தின் வித்தினால் பிறந்த முதலாவது பொல்லாங்கன். பிசாசும் பொல்லாங்கன். காயீனும் பொல்லாங்கன். பிசாசாகிய பொல்லாங்கனின் சுபாவத்தை காயீன் தரித்துப்போட்டான்.

காயீனுடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருந்தது. அவனுடைய சகோதரனாகிய ஆபேலின் கிரியைகளோ நீதியுள்ளவைகளாயிருந்தது. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் இல்லை. பொல்லாங்கும் நீதியும் ஒருபோதும் ஒத்துப்போகாது. காயீன் பொல்லாங்கனால் உண்டானவன். நீதியைப் பகைக்கிறவன். இதனால் நீதியுள்ள கிரியைகளைச் செய்த தன் சகோதரனாகிய ஆபேலை, காயீன் கொலை செய்தான்.

காயீனுடைய பொல்லாங்கு கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. அவனுக்குள் எந்தவிதமான கட்டுப்பாடுமில்லை. தன் சகோதரனையே கொலை செய்யுமளவுக்கு காயீனுடைய பொல்லாங்கு துன்மார்க்கம் நிறைந்ததாயிருந்தது. ஒருவர் பாவத்திற்கு அடிமையாயிருக்கும்போது, அவருடைய பாவத்திற்கு அளவே இருக்காது. ஒரு பாவம் மற்றொரு பாவத்தைப் பிறப்பிக்கும். பாவத்தினால் பொறாமை உண்டாகும். பொறாமையினால் கொலைசெய்யும் வெறிஉண்டாகும்.

ஆபேலின் கிரியைகள் நீதியுள்ளவைகளாயிருந்தது. இவை மேன்மையுள்ளவைகளாயிருந்தது. கர்த்தர் ஆபேலின் கிரியைகளை அங்கீகரித்தார். இதனால் காயீன் தன் சகோதரன் ஆபேல்மீது பொறாமைப்பட்டான். காயீனின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருந்தது. அவனுடைய கிரியைகளை கர்த்தர் அங்கீகரிக்கவில்லை. காயீன் தன் சகோதனைக் கொலைசெய்தான். இவனுடைய மனதில் துர்ச்சிந்தனை இருந்தது. பழிவாங்கும் சிந்தனை இருந்தது. மனதிலிருந்த சிந்தனை பாவசெயலாக கிரியை நடப்பித்தது.

இந்த உலகத்தில் தேவனுடைய பிள்ளைகளும் இருக்கிறார்கள். பிசாசின் பிள்ளைகளும் இருக்கிறார்கள். தேவனுடைய பிள்ளைகள் நீதியைச் செய்கிறவர்கள். நல்லவர்கள். பிசாசின் பிள்ளைகளோ பொல்லாங்கானவைகளைச் செய்கிற பாவிகள். இந்த உலகத்தில் நல்லவர்களை பொல்லாதவர்கள் பகைக்கிறார்கள். சர்ப்பத்தின் சுபாவம் இந்த உலகத்தில் நிரம்பியிருக்கிறது. உலகம் நம்மைப் பகைத்தால், நாம் ஆச்சரியப்படக்கூடாது. இந்தப் பிரபஞ்சத்தில் சாத்தான் இருக்கும் வரையிலும் அவனுடைய பொல்லாங்கான சுபாவமும் இருக்கத்தான் செய்யும்.

ஆபேலுக்குக் காயீன் செய்ததுபோலவே நமக்கு இந்த உலகம் செய்வதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால் இந்த உலகம் நம்மைப் பகைக்கும்போது ஆச்சரியப்பட வேண்டாம்.

G. நாம் அறிந்திருக்கும் சத்தியங்கள்

1. நாம் அவரை அறிந்திருக்கிறோம். (1யோவான் 2:3).

2. நாம் அவருக்குள் இருக்கிறோம். (1யோவான் 2:5).

3. இது கடைசி காலமாய் இருக்கிறது. (1யோவான் 2:18).

4. சத்தியத்தின் சகலத்தையும் அறிந்திருக்கிறோம். (1யோவான் 2:20).

5. சத்தியத்தை அறிந்திருக்கிறோம். (1யோவான் 2:21).

6. சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாயிராது. (1யோவான் 2:21).

7. நீதியைச் செய்கிறவன் எவனோ அவன் தேவனில் பிறந்தவன். (1யோவான் 2:29).

8. அவர் வெளிப்படும் போது நாம் அவருக்கு ஒப்பாய் இருப்போம். (1யோவான் 3:2).

9. அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார். அவரிடத்தில் பாவமில்லை. (1யோவான் 3:5).

10. நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிற படியால் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம். (1யோவான் 3:14).

11. மனுஷ கொலைபாதகனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது. (1யோவான் 3:15).

12. நாம் சத்தியத்திற்குரியவர்கள். (1யோவான் 3:19)

13. கிறிஸ்து நம்மில் நிலைத்திருக்கிறார். (1யோவான் 3:24).

14. தேவனுடைய ஆவியை நாம் பெற்றிருக்கிறோம். (1யோவான் 4:2,13).

15. சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சக ஆவி இன்னதென்றும் நாம் அறிந்திருக்கிறோம். (1யோவான் 4:6).

16. நாம் அவரில் நிலைத்திருக்கிறோம். அவர் நம்மில் நிலைத்திருக்கிறார். (1யோவான் 4:13).

17. தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோம். (1யோவான் 5:2).

18. நமக்கு நித்திய ஜீவன் உண்டு. (1யோவான் 5:13).

19. தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான். (1யோவான் 5:18).

20. நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம். (1யோவான் 5:19).

21. தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறார். (1யோவான் 5:20).

ஊ. சகோதரனிடத்தில் அன்புகூருதல் 1யோவா 3 : 14,15

1யோவா 3:14. நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.

1யோவா 3:15. தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

நம்முடைய அன்பு பரிசுத்தமாயிருக்கவேண்டும். நம்மிடத்தில் அன்பு இருக்கிறது என்று வாயினால் சொன்னால் மாத்திரம் போதாது. நாம் மெய்யாகவே அன்புகூர்ந்து நம்மிடத்திலுள்ள அன்பை உறுதிபண்ணவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தேவனால் பிறந்தவர்கள். மறுபடியும் பிறந்திருக்கிறவர்கள். நம்முடைய சுபாவம் புதுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். பழைய பாவஜீவியத்தின் சுபாவம் நம்மிடத்தில் காணப்படக்கூடாது.

நாம் சகோதரர்களிடத்தில் அன்புகூரவேண்டும். அப்போதுதான் நாம் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்பது உறுதியாகும். நாம் இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறோம். நம்மிடத்தில் நாம் அன்புகூருவதுபோல, பிறரிடத்திலும் அன்புகூரும்போதுதான் கிறிஸ்துவினிடத்தில் நாம் வைத்திருக்கிற விசுவாசம் உண்மையானது என்பது நிருபணமாகும்.

கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கவேண்டும். பொதுவாக மனுஷரெல்லோரிடத்திலும் நாம் அன்புகூரவேண்டும். நல்லோரிடத்திலும், பொல்லாரிடத்திலும் நாம் அன்பாகவே இருக்கவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகள் யாரையும் பகைக்கக்கூடாது. சர்வசிருஷ்டிகளும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. தேவன் மனுக்குலத்தை அற்புதமாக சிருஷ்டித்திருக்கிறார். தேவன் தம்முடைய சாயலாக நம்மை சிருஷ்டித்து, மனுக்குலத்தைக் கனப்படுத்தியிருக்கிறார்.

தேவன் மனுஷரை சிருஷ்டித்து அவர்களிடத்தில் அன்புகூருகிறார். தேவன் அன்புகூருகிற ஜனங்களிடம் நாமும் அன்புகூரவேண்டும். ஒருவர்மீது தேவன் அன்புகூரும்போது, நாம் அந்த நபரைப் பகைக்கக்கூடாது. நம்மை சிநேகிக்கிறவர்களை மாத்திரமே நாம் சிநேகிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. நம்மைப் பகைக்கிறவர்களையும் நாம் சிநேகிக்கவேண்டும் என்பதுதான் இயேசுகிறிஸ்துவின் உபதேசம்.

சகோதரரிடத்தில் அன்புகூருகிறவன் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். சகோதரனிடத்தில் அன்புகூராதவனோ மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். மனுஷரைப் பகைக்கிறவன் மனுஷருடைய ஜீவனையும், மனுஷருடைய நன்மையையும் பகைக்கிறான். மனுஷரை விரும்பாதவன்தான் மனுஷரைப் பகைப்பான்.

இந்தப் பிரபஞ்சத்தில் மனுஷர் யாருமே இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் மனுஷரைப் பகைப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் கொலைபாதகராகயிருப்பார்கள். காயீன் தன் சகோதரன் ஆபேலைப் பகைத்தான். அவன் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து அவனைக் கொலைசெய்தான். தன் சகோதரனை பகைக்கிற எவனும் மனுஷர் கொலைபாதகனாயிருக்கிறான்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் மனுஷரிடத்தில் அன்புகூரவேண்டும். நம்மைச் சிநேகிக்கிறவர்களிடத்திலும், நம்மைப் பகைக்கிறவர்களிடத்திலும் நாம் அன்புகூரவேண்டும். நாம் எல்லோரிடத்திலும் அன்புகூரும்போது, கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில் நாம் விசேஷிமாக அன்பு கூரவேண்டும். மனுஷர் நிமித்தமாக நாம் விசேஷித்த அன்புகூராவிட்டாலும், கர்த்தர் நிமித்தமாய் நாம் விசுவாசிகளிடத்தில் விசேஷித்த அன்புகூரவேண்டும். ஏனெனில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளிடத்தில் விசேஷித்த அன்புகூருகிறார். கர்த்தர் அன்புகூருகிற பிள்ளைகளிடத்தில் நாமும் அன்புகூரவேண்டும். நாம் ஆவிக்குரிய விசுவாசிகளிடத்தில் அன்புகூரும்போது, மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம்.

நம்முடைய சகோதரரிடத்தில் நாம் அன்புகூரவில்லையென்றால் நாம் மரணத்திலே நிலைகொண்டிருப்போம். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருப்பான். காயீன் தன் சகோதரன் ஆபேலைப் பகைத்தான். பகை வளர்ந்தது. காயீன் ஆபேலைக் கொலைசெய்தான். மனுஷகொலைபாதகனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது. இவனுடைய இருதயத்தில் சகோதர சிநேகம் இருக்காது. அதற்குப் பதிலாக மனுஷபகை நிரம்பியிருக்கும். கொலைபாதகம் நிரம்பியிருக்கும். இவர்களுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது.

H. நித்திய ஜீவனும், இயேசு கிறிஸ்துவும் ஒருவரே

வேத வசனங்கள் சிலவற்றில் நித்திய ஜீவனும், இயேசு கிறிஸ்துவும் ஒரே பொருளையுடைய வார்த்தைகளாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஜீவன் இயேசு கிறிஸ்துவைப் போல நித்தியமானது. நம்முடைய ஜீவனை நாம் இழந்தாலும், அது நித்தியமானதுதான். ஆனால் பாவம் செய்து ஜீவிப்போமானால் நம்முடைய ஜீவனை நாம் நரகத்தில்தான் நித்திய காலமாக செலவிட வேண்டும். தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு ஜீவித்தால் பரலோகத்தில் தேவனோடு நித்திய காலமாக ஜீவிக்கலாம்.

நித்திய ஜீவனும் கிறிஸ்துவும் தனி மனுஷரிடத்தில் வெவ்வேறாகவே இருப்பார்கள். பாவம் செய்கிறவனிடத்தில் நித்திய ஜீவன் நிலைத்திராது. தேவபக்தியுள்ளவர்களிடத்தில் நித்திய ஜீவன் நிலைத்திருக்கும்.

எ. தேவஅன்பு 1யோவா 3 : 16-19

1யோவா 3:16. அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

1யோவா 3:17. ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?

1யோவா 3:18. என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

1யோவா 3:19. இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அன்புள்ளவராகவே இருக்கிறார். அவர் தம்முடைய ஜீவனையே நமக்காகக் கொடுத்தார். தேவனுடைய அன்பு பரிசுத்தமான அன்பு. தேவன் நம்மீது அன்புகூர்ந்தபடியினால், தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை, நமக்காக ஒப்புக்கொடுத்தார். மரிக்கும்படியாக ஒப்புக்கொடுத்தார். இதன் மூலமாய் அன்பு என்றால் என்ன என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

விசுவாசிகளாகிய நம்முடைய அன்பு மெய்யான அன்பாக இருக்கவேண்டும். நம்முடைய அன்பில் மாய்மாலம் இருக்கக்கூடாது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்காக ஜீவனைக் கொடுத்ததுபோல, நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம். ஜனங்கள் இரட்சிக்கப்படவேண்டுமென்பதற்காக நாம் நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இதன் நிமித்தமாய் பாடுகளை அநுபவிக்கவேண்டியது வந்தாலும் அந்தப் பாடுகளை பொறுமையோடு சகித்துக்கொள்ளவேண்டும். நம்முடைய சகோதரர் இரட்சிக்கப்படவேண்டுமென்பதற்காக நம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்கும், இரத்தசாட்சியாய் மரிப்பதற்கும் நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும்.

நம்முடைய இரட்சிப்புக்காக, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனையே நமக்காகக் கொடுத்தார். தேவனுடைய அன்பு தெய்வீக அன்பு. அது பரிசுத்தமான அன்பு. இயேசுகிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டிருக்கிற நம்மிடத்தில் கிறிஸ்துவின் சுபாவம் காணப்படவேண்டும். கிறிஸ்து மனுக்குலத்திற்காக தம்முடைய ஜீவனையே கொடுத்து, தம்முடைய அன்பை வெளிப்படுத்தியதுபோல, அவருடைய பிள்ளைகளாகிய நாமும், ஜனங்களுடைய இரட்சிப்புக்காக நம்முடைய ஜீவனையும் கொடுக்க நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். நம்முடைய ஜீவனைக்கொடுக்க நாம் கடனாளிகளாயும் இருக்கிறோம்.

நம்முடைய ஜீவியத்தை தேவனுடையசமுகத்தில் அற்பணிக்கவேண்டும். கர்த்தருடைய ஊழியத்தை கருத்தாய்ச் செய்யவேண்டும். ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்கு நம்முடைய ஜீவனையே கொடுக்கவேண்டியது வந்தாலும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்காக நம்முடைய ஜீவனைக் கொடுக்க நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எதை இழந்துபோகிறோமோ, அதை நம்முடைய கர்த்தர் நமக்குத் திரும்பக்கொடுப்பார். அதைவிட மேன்மையானதைக் கொடுப்பார். நாம் இழந்துபோனதைவிட அதிகமானதைக் கொடுப்பார்.

நம்முடைய அன்பில் தியாகம் இருக்கவேண்டும். நம்முடைய இருதயம் மனதுருக்கமுள்ளதாயிருக்கவேண்டும். தேவையுள்ளவர்களுக்கு நாம் தாராளமாய் உதவி செய்ய முன்வரவேண்டும். கர்த்தர் நமக்கு இவ்வுலக ஆஸ்தியைக் கொடுத்து ஆசீர்வதிக்கும்போது, நாமும் இந்த ஆஸ்தியை குறைச்சலுள்ளவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கவேண்டும். உலக ஆஸ்தியை உடையவர்கள் கர்த்தருடைய சித்தத்தையும், அவருடைய அன்பையும் மறந்துவிடக்கூடாது.

குறைச்சலுள்ள சகோதரருக்கு நம்முடைய உலக ஆஸ்தியை தாராளமாய்ப் பகிர்ந்துகொடுக்கவேண்டும். நாம் சகோதரரிடத்தில் அன்புகூரும்போது, கர்த்தரிடத்தில் அன்புகூருகிறோம். குறைச்சலுள்ள சகோதரருக்கு நம்முடைய இருதயத்தை அடைத்துக்கொள்ளக்கூடாது. குறைச்சலுள்ளவர்களுக்கு இருதயத்தை அடைத்துக்கொண்டவர்களிடத்தில் தேவஅன்பு நிலைகொள்ளாது. அவர்களிடத்தில் தேவஅன்பு சிறிதும் இருக்காது.

நம்மிடத்திலுள்ள அன்பு கிரியை நடப்பிக்கவேண்டும். நாம் வசனத்தினாலும் நாவினாலும் மாத்திரம் பிறரிடத்தில் அன்புகூர்ந்தால் போதாது. நம்முடைய கிரியையினாலும் உண்மையினாலும் பிறரிடத்தில் அன்புகூரவேண்டும். நம்முடைய அன்பில் உண்மையிருக்கவேண்டும். மனுஷர் நம்மைப் புகழவேண்டுமென்பதற்காக, சாதுரிய வார்த்தைகளையோ, மாய்மாலமான வார்த்தைகளையோ பேசக்கூடாது. ஒரு நன்மையும் செய்யாமல் வெறும் பேச்சுக்களை மாத்திரம் பேசுவது கிறிஸ்துவின் சுபாவமல்ல. நம்முடைய கிரியையினாலும் உண்மையினாலும் பிறரிடத்தில் அன்புகூரும்போது, நமக்குள் தேவஅன்பு மெய்யாகவே நிலைகொள்ளும்.

நாம் பிறரிடத்தில் அன்புகூரும்போது கர்த்தருடைய சுபாவம் நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. நமக்குள் சத்தியம் இருக்கிறது. நாமும் சத்தியத்திற்குரியவர்களாயிருக்கிறோம். நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமுள்ளதாயிருக்கவேண்டும். இருதயத்தில் அன்பும், நீதியும், கிருபையும், மனதுருக்கமும் நிரம்பியிருக்கவேண்டும்.

நாம் மற்ற சகோதரரிடத்தில் கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரும்போது, நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக மாசில்லாததாயிருக்கும். சுத்தமுள்ளதாயிருக்கும். கர்த்தருக்கு முன்பாக நாம் சத்தியத்திற்குரியவர்கள் என்பதை நாம் நிச்சயமாய் அறிந்துகொள்ளலாம். நாம் சத்தியத்திற்குரியவர்களாய் இருக்கும்போது, நம்முடைய இருதயத்தில் சந்தோஷமும் சமாதானமும் நிரம்பியிருக்கும். நமக்குள் அன்பு நிரம்பியிருக்கும். அந்த அன்பு கிரியையினாலும் உண்மையினாலும் வெளிப்படும்.

இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார். ஆகையினால் நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். நாம் தேவனிடத்தில் அன்புகூரவேண்டும். மனுஷரிடத்திலும் அன்புகூர வேண்டும்.

நம்முடைய சகோதரனுக்குக் குறைச்சல் உண்டென்று நாம் காணும்போது அவனுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். பிறரைத் தன்னைப்போல் நேசிக்கவேண்டும். இல்லையென்றால் தேவஅன்பு நம்மில் நிலை கொள்ளாது.

I. நாம் அன்புகூரக்கூடாத இரண்டு வழிகள்

1. வசனத்தினால் - உபதேசத்தினால்

2. நாவினால் - அறிக்கையிடுவதினால்

J. நாம் அன்புகூரவேண்டிய இரண்டு வழிகள்

1. கிரியையினால் - செய்யும் செயல்களினால்

2. உண்மையினால் - உபதேசம், அறிக்கையிடுதல் ஆகியவற்றில் உண்மையாக இருப்பதினால்.

K. நாம் மெய் அன்புகூருவதினால் நமக்கு வரும் ஆசீர்வாதங்கள்

1. நாம் சத்தியத்திற்குரியவர்கள் என்பது உறுதியாகிறது.

2. தேவனுக்கு முன்பாக நம்முடைய இருதயம் சுத்தமாயுள்ளது என்று உறுதியாகிறது.

3. நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்ப்பதிலிருந்து விடுதலை. (1யோவான் 3:20-21)

4. தேவனிடத்தில் நம்பிக்கையும், தைரியமும். (1யோவான் 3:21)

5. ஜெபத்திற்குப் பதில் கிடைத்தல். (1யோவான் 3:22)

J. ""இருதயம்'' என்னும் வார்த்தை வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம்

1. சரீரத்தின் ஒரு உறுப்பு (2சாமு 18:14)

2. ஒரு காரியத்தின் மையப்பகுதி. (மத் 12:40)

3. ஆவியையும், ஆத்துமாவையும் உடைய உள்ளான மனுஷன். (சங் 51:10)

4. மனச்சாட்சி. (மாற்கு 8:17)

5. சித்தம். (அப் 4:32)

6. சிந்தை

7. ஆத்துமா

8. ஆவி

ஐ. இருதயம் 1யோவா 3 : 20-22

1யோவா 3:20. நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.

1யோவா 3:21. பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,

1யோவா 3:22. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.

நம்முடைய மனச்சாட்சி சுத்தமுள்ளதாயிருக்கவேண்டும். நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகள் என்று தீர்க்கக்கூடாது. இருதயத்தின் நினைவுகளை வாய் பேசும். நம்முடைய உள்ளான சுபாவத்தை நம்முடைய இருதயம் நியாயந்தீர்க்கும். நாம் குற்றவாளிகளா அல்லது நிரபராதியா என்பது நம்முடைய இருதயத்திற்குத் தெரிந்திருக்கும். நம்முடைய இருதயமே நம்மை குற்றவாளிகளாகத்தீர்க்குமானால், நாம் மெய்யாகவே குற்றவாளிகளாகத்தான் இருப்போம். நாம் மனுஷருக்கு முன்பாகவும் தேவனுக்கு முன்பாகவும் குற்றமுள்ளவர்களாகவே இருப்போம்.

நம்முடைய இருதயத்தைப்போலவே நம்முடைய மனச்சாட்சியும் நம்மை நிதானித்து அறிந்திருக்கிறது. நம்முடைய மனச்சாட்சி தேவனுடைய பிரதிநிதியாக நமக்குள் கிரியை நடப்பிக்கிறது. தேவனுடைய நாமத்தினாலே மனச்சாட்சி நம்மோடு பேசுகிறது. தேவனுடைய நாமத்தினாலே மனச்சாட்சி நமக்குள்ளே கிரியை நடப்பிக்கிறது. நம்முடைய மனச்சாட்சி நம்மை குற்றவாளிகளென்று தீர்க்குமென்றால், தேவனும் நம்மை குற்றவாளிகள் என்றே தீர்ப்பார்.

தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருக்கிறார். அவர் நம்முடைய மனச்சாட்சியிலும் பெரியவராயிருக்கிறார். நம்முடைய மனதின் சாட்சியைவிட தேவனுடைய சாட்சியே பெரியது. மனச்சாட்சியைவிட தேவன் பெரியவர். தேவன் சகலத்தையும் அறிந்திருக்கிறார். நம்முடைய இருதயத்திற்கும் மனச்சாட்சிக்கும் தெரியாததைக்கூட, தேவன் அறிந்திருக்கிறார். நம்முடைய மனச்சாட்சிக்கும் தேவனே பிரதான சாட்சியாகயிருக்கிறார்.

நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், தேவனும் நம்மை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டார். நாம் தேவனிடத்தில் தைரியமாய் வரலாம். அவர் நம்மை ஏற்றுக்கொள்வார் என்னும் நிச்சயம் நமக்குள் உண்டாயிருக்கும். நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளென்று தீர்க்காததினால், தேவனும் நம்மை குற்றவாளிகளென்று தீர்க்கமாட்டார் என்னும் தைரியத்தோடு அவருடைய சமுகத்திற்கு முன்பாக வரலாம்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய இருதயத்தின் சத்தத்தைக் கேட்கவேண்டும். நம்முடைய மனச்சாட்சி நம்மோடு பேசுவதை கேட்கவேண்டும். இருதயத்தின் சத்தத்திற்கு கருத்தாய்ச் செவிகொடுத்து, அதற்கு கவனமாய்க் கீழ்ப்படியவேண்டும்.

தேவனுக்கு முன்பாக நம்முடைய மனச்சாட்சி சுத்தமுள்ளதாயிருக்கவேண்டும். நாம் கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும். அவருக்கு முன்பாக அவருக்குப் பிரியமானவைகளைச் செய்யவேண்டும். அப்போது கர்த்தர் நம்மீது பிரியமாயிருப்பார். தேவனுடைய சமுகத்தில் நமக்கு சிலாக்கியம் கொடுக்கப்படும். கீழ்ப்படிதலுள்ள ஆத்துமாக்கள் கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கும். கர்த்தருடைய சமுகத்தில் நாம் வேண்டிக்கொள்கிறதெதுவோ அதை கர்த்தர் செவிகொடுத்துக் கேட்பார். நாம் வேண்டிக்கொண்டவற்றை கர்த்தராலே பெற்றுக்கொள்வோம். கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருக்கு முன்பாக பிரியமானவைகளைச் செய்து, ஜெபம்பண்ணுகிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார். அவர்கள் வேண்டிக்கொள்கிறதெதுவோ அதை அவர்களுக்கு தருவார்.

L. சிந்தையில் அடங்கியுள்ள காரியங்கள்

1. எண்ணங்கள் (ஆதி 6:5; யோவான் 12:40)

2. கற்பனைகள். (ஆதி 8:21)

3. புரிந்து கொள்ளுதல் (1இராஜா 3:9,12)

4. ஞானம் (யாத் 35:35; நீதி 2:10)

5. குருடு (உபா 28:28; ரோமர் 1:21)

6. தியானம் (சங் 19:14; லூக்கா 2:19)

7. ஏமாற்றுதல். (நீதி 12:20; எரே 17:9)

8. துன்மார்க்கம் (எரே 17:9)

9. சந்தேகம் (மாற்கு 9:23; யாக் 4:8)

10. நோக்கங்கள் (அப் 11:23)

M. ஆத்துமாவில் அடங்கியுள்ள காரியங்கள்

1. துக்கம் (ஆதி 6:6; உபா 15:10)

2. சந்தோஷமும், மகிழ்ச்சியும். (உபா 28:47)

3. ஆவல்கள் (சங் 37:4)

4. வருத்தம் (நீதி 14:10; நீதி 15:13)

5. சோர்வு (உபா 1:28)

6. பயம் (உபா 28:65-67)

7. ஆறுதல் (நியா 19:8)

8. வேதனை (சங் 55:4)

N. ஆவியில் அடங்கியுள்ள காரியங்கள்

1. வைராக்கியம் (யாத் 35:21,26; யாத் 36:2)

2. தாழ்மை (சங் 34:18; மத் 11:29)

3. உண்மை (நெகே 9:8)

4. விரோதம் (லேவி 19:17)

5. பெருமை (உபா 8:14; உபா 17:20)

6. புத்தியீனம் (நீதி 22:15)

7. ஒற்றுமை (ஆதி 20:5-6; 1இராஜா 2:44)

8. அநீதி (சங் 22:26 சங் 69:32)

O. ஜெபத்திற்குப் பதில் கிடைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய காரியங்கள்

1. ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து விடுதலை (ரோமர் 8:1)

2. தேவனிடத்தில் நம்பிக்கை (அப் 4:13)

3. கேட்பது. (மத் 7:7-11; லூக்கா 11:9-13)

4. தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வது (1யோவான் 3:23-24)

5. தேவனைப் பிரியப்படுத்துவது (எபி 11:6; யாக் 1:5-8)

ஒ. தேவனுடைய கற்பனை 1யோவா 3 : 23,24

1யோவா 3:23. நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.

1யோவா 3:24. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

அப்போஸ்தலர் யோவான் தேவனுடைய இரண்டு கற்பனைகளை இங்கு எழுதுகிறார். அவையாவன : 1. இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் நாம் விசுவாசமாயிருக்கவேண்டும். 2. அவர் நமக்கு கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன். பிதாவானவர் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை உலகஇரட்சகராக அபிஷேகம்பண்ணியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவை நம்முடைய ஆத்துமாவுக்கு இரட்சகர் என்றும், நம்முடைய ஜீவனுக்கு ஆண்டவர் என்றும் நாம் விசுவாசிக்கவேண்டும். தேவனுடைய கிருபைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அவருடைய இரட்சிக்கும் கிருபை நம்மை ஆளுகை செய்யவேண்டும்.

நாம் கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது, விசுவாசத்தோடு ஜெபிக்கவேண்டும். விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் நம்மிடத்தில் காணப்படவேண்டும். பிதாவாகிய தேவனிடம், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே நம்மால் பிரவேசிக்க முடியும். கிறிஸ்து மூலமாக மாத்திரமே நாம் ஜெபம்பண்ணவேண்டும். கிறிஸ்துவானவர் தேவனுக்கும் நமக்கும் நடுவிலே மத்தியஸ்தராயிருக்கிறார். கிறிஸ்துவானவரே நமக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிறார். இயேசுகிறிஸ்துவின் நாமம் பரிசுத்த நாமம். அந்த நாமத்தின்மேல் நாம் விசுவாசமாயிருக்கும்போது, தேவனுடைய கிருபைகளையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக்கொள்கிறோம்.

நம்மிடத்தில் அன்புகூருவதுபோல நாம் பிறரிடத்திலும் அன்புகூரவேண்டும். ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். இதுவே அவருடைய கற்பனை. பரலோகத்திலுள்ள தேவன் மனுஷரை நேசிக்கிறார். அவர் மனுஷர்மீது அன்பாகயிருக்கிறார். மனுஷருடைய நன்மையை விசாரிக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இந்தப்பிரபஞ்சத்தில் தேவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்தவேண்டும். கர்த்தர் மனுஷரிடத்தில் அன்பாயிருப்பதுபோல, நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும். பரலோகத்திற்குப்போகிற நம்முடைய இருதயத்தில், பரலோகத்திலுள்ள தேவனுடைய சிந்தனை நிரம்பியிருக்கவேண்டும். அவருடைய அன்பு நம்மிடமிருந்து வெளிப்படவேண்டும். நாம் கிரியையினாலும் உண்மையினாலும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்.

கர்த்தருடைய பிள்ளைகள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும். அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவேண்டும். கர்த்தருடைய கட்டளைக்கு நாம் கீழ்ப்படியும்போது, கர்த்தரோடு நமக்கு ஐக்கியமுண்டாகிறது. கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்கள், கர்த்தரில் நிலைத்திருக்கிறார்கள். கர்த்தரும் அவர்களில் நிலைத்திருக்கிறார். கர்த்தர் நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தந்தருளியிருக்கிறார். அவர் நமக்கு சகல சத்தியத்தையும் குறித்து சாட்சியாக அறிவிக்கிறார். நம்முடைய தேவன் நம்மில் நிலைத்திருக்கிறார் என்பதை, நமக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே நமக்கு அறிவிக்கிறார்.

P. இரட்சிப்பின் கட்டளைகள்

1. இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்க வேண்டும். (மத் 1:21)

2. ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும். (1யோவான் 4:7-14)