1யோவா அதிகாரம் 1 விளக்கம்

அ. தேவன் ஒளியாயிருக்கிறார் 1யோவா 1:5

1யோவா 1:5. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து ""தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை'' என்னும் சத்தியம் வெளிப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்கள். அவருடைய சத்தியத்தை அறிவிக்கிறவர்கள். இயேசுகிறிஸ்துவின் சத்தியங்களை இந்த உலகத்திற்கு அறிவிப்பது அப்போஸ்தலருக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். கர்த்தரே மனுஷரை சிருஷ்டித்திருக்கிறார். அவரே மண்பாத்திரங்களாகிய நம்மைக் கனப்படுத்துகிறார்.

அப்போஸ்தலர்கள் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட சத்தியங்களை, ஜனங்களுக்கு உண்மையாய் அறிவிக்கிறார்கள். இதுவே இவர்களுடைய ஊழியம். இந்த ஊழியத்தை உண்மையாயும், உற்சாகமாயும் நிறைவேற்றுகிறார்கள். இப்போது இயேசுகிறிஸ்து, ""தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை'' என்னும் சத்தியத்தை அப்போஸ்தலருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுகிறிஸ்து அழகுள்ளவர். பரிபூரணமுள்ளவர். அவருடைய அழகும் பரிபூரணமும் தேவனுடைய ஒளியில் நமக்கு தெளிவாகத் தெரிகிறது. அவரிடத்தில் எவ்வளவேனும் இருளில்லை. எவ்வளவேனும் குறைவில்லை.

இந்தப்பிரபஞ்சம் காரிருளில் இருக்கிறது. மகாதேவனோ ஒளியாயிருக்கிறார். அவர் சுத்தமான ஒளியாகவும், பரிபூரணமான ஒளியாகவும் இருக்கிறார். அவரிடத்தில் எவ்வளவேனும் இருளில்லை. இருளான இந்த உலகத்தில் தேவனே ஒளியாயிருக்கிறார். தேவனாலேயல்லாமல் வேறு யாராலும் இந்த உலகத்திற்கு ஒளி உண்டாகப்போவதில்லை. இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தியிருக்கிற இந்தச் சத்தியம் திவ்வியமானது. தேவன் ஒளியாயிருக்கிறார் என்பது எக்காலத்திற்கும் மெய்யான சத்தியம். அவரில் எவ்வளவேனும் இருளில்லை என்னும் சத்தியம் பரிபூரணமானனன சத்தியம்.

""தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை'' என்னும் செய்தியை இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு அறிவிக்க வந்தார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசேயோ, அல்லது வேறு எந்த தீர்க்கதரிசிகளோ இந்தச் சத்தியத்தை இயேசு கிறிஸ்துவைப்போல முழுமையாக அறிவிக்கவில்லை. தேவனுடைய ஒளியை இயேசு கிறிஸ்து தாமே மனுஷருக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார்.

தேவன் ஆள்தத்துவப் பண்புடையவர். அவர் ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக் கூடாதவருமாயிருக்கிறார். தேவன் ஒளியாய் இருக்கிறார் என்பது அவருடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்து வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருப்பதுபோல

தேவன் ஞானம், அறிவு, பரிசுத்தம், சத்தியம் ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறவர். அவரிடத்தில் அறியாமை, பாவம், இருள் ஆகிய எதுவும் காணப்படுவதில்லை. இந்த உலகத்திற்குச் சூரியன் ஒளியாக இருப்பதுபோல தேவன் மனுஷருக்கு ஒளியாய் இருக்கிறார்.

ஆ. இருளிலே நடக்கிறவர்கள் 1யோவா 1:6

1யோவா 1:6. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்-யும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.

இயேசுகிறிஸ்து சொன்ன சத்திய வசனத்திற்கு அப்போஸ்தலர் யோவான் வியாக்கியானம் சொல்லுகிறார். ""தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை'' என்பது இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தியிருக்கிற சத்தியம். நாம் அவரோடேகூட ஐக்கியப்பட்டவர்களாயிருப்போமென்றால், நாமும் ஒளியிலே நடக்கவேண்டும். நாம் இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், நாம் சத்தியத்தின்படி நடவாமல், பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். இருளில் நடப்பது என்பது பாவத்தில் ஜீவிப்பது, அறியாமையில் ஜீவிப்பது, துன்மார்க்கமாக ஜீவிப்பது என்பதைக் குறிக்கும். இருளில் நடப்பது பரிசுத்த மார்க்கத்திற்கு முரணானது.

நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லுகிறோம். நம்முடைய வார்த்தைக்கேற்ற பிரகாரம் நம்முடைய ஜீவியம் பரிசுத்தமுள்ளதாயிருக்கவேண்டும். நம்முடைய வார்த்தையும் கிரியையும் ஒத்துப்போகவேண்டும். ஒன்றுக்கொன்று முரண்படக்கூடாது. நாம் இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், துன்மார்க்கமாகவும், அசுத்தமாகவும் ஜீவிப்போமென்றால் நாம் சத்தியத்தின்படி நடக்கிறவர்களல்ல. இப்படிப்பட்டவர்கள் பொய்சொல்லுகிறார்கள் என்று அப்போஸ்தலர் யோவான் தெளிவாகச் சொல்லுகிறார்.

சத்தியத்தின்படி நடவாமல், இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள், பொய்சொல்லுகிறவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய நடத்தையும் வார்த்தையும் முரண்பட்டிருக்கிறது. பரிசுத்தவான்களைப்போல பேசுகிறார்கள். ஆனால் துன்மார்க்கராக ஜீவிக்கிறார்கள்.

A. ""-ஆல்'' "ஒச்" என்னும் வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற விதம்

1. மாய்மாலக்காரர் பயன்படுத்தும் விதம். - நாம் அவரோடே ஐக்கியப் பட்டவர்களென்று சொல்-யும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின் படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். (1யோவான் 1:6)

2. விசுவாசிகள் பயன்படுத்தும் விதம். அவர் ஒளியி-ருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப் பட்டிருப்போம். (1யோவான் 1:7).

3. தங்களைத்தாங்களே வஞ்சிக்கிறவர்கள் பயன்படுத்தும் விதம் - நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1யோவான் 1:8)

4. தன் பாவத்திற்காக மனம்வருந்துகிற பாவி பயன்படுத்தும் விதம் - நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோவான் 1:9)

5. தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணுகிறவர்கள் பயன்படுத்தும் விதம் - நாம் பாவஞ்செய்யவில்லை யென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர் களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது (1யோவான் 1:10)

இ. ஒளியிலே நடக்கிறவர்கள் 1யோவா 1:7

1யோவா 1:7. அவர் ஒளியி-ருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

தேவன் ஒளியாயிருக்கிறார். அவருடைய பிள்ளைகளாகிய நாம் ஒளியிலே நடக்கவேண்டும். நாம் ஒளியிலே நடந்தால் தேவனோடு ஐக்கியப்பட்டிருப்போம். ஒளியிலே நடக்கிறவர்கள் தேவனை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். ஒளியில் நடக்கிற விசுவாசிகள் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்பார்கள். அவர்கள் நம்மோடு இணைந்திருப்பார்கள். நாம் அவர்களோடு இணைந்திருப்போம். விசுவாசிகளாகிய நாமெல்லோருமே தேவனோடு ஐக்கியப்பட்டிருப்போம்.

தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்கு நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தையே மீட்பின் கிரயமாகச் செலுத்தினார். நம்முடைய பாவங்களை மீட்பதற்காக அவர் பாவமானார். அவர் ஒருபாவமும் அறியாதவர். ஆனாலும் அவர் நம் நிமித்தமாக சாபமானார். நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையிலே, தம்மையே பாவநிவாரண பலியாகச் செலுத்தினார்.

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். கிறிஸ்துவின் இரத்தம் பரிசுத்தமானது. அது வல்லமையுள்ளது. நம்முடைய பாவங்களை நீக்க பெலனுள்ளது. நாம் இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, கிறிஸ்துவின் இரத்தம் நம்மிடத்திலுள்ள சகல பாவங்களையும் நம்மைவிட்டு நீக்குகிறது. பாவங்களை நம்மைவிட்டு முற்றிலுமாக நீக்கிப்போடுகிறது. கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம்.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை செய்யும்போது நம்முடைய சகல பாவங்களையும் இயேசு கிறிஸ்து நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறார். இயேசு கிறிஸ்து ஒளியி-ருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.

ஈ. பாவம் 1யோவா 1:8-10

1யோவா 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

1யோவா 1:9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

1யோவா 1:10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

அப்போஸ்தலர் யோவான் விசுவாசிகளுடைய பரிசுத்தமான ஐக்கியத்தைப்பற்றிச் சொல்லுகிறார். விசுவாசிகளாகிய நாம் ஒளியிலே நடக்கும்போது ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். நம்முடைய தேவனோடும் ஐக்கியப்பட்டிருப்போம். நம்மிடத்தில் பரலோகத்தின் ஐக்கியம் இருந்தாலும், நமக்குள் பாவமும் இருக்கிறது. தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். ஆனாலும் நமக்குள் பாவமும் இருக்கிறது.

நமக்கு பாவமில்லை என்போமானால் நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். நம்மிடத்தில் பாவம் இருக்கும்போது, நம்மிடத்தில் பாவம் இல்லையென்று சொல்லி நம்முடைய உண்மை நிலையை மறுதலிக்கக்கூடாது. நம்முடைய பாவங்களை நாமே மன்னித்துக்கொள்ளக்கூடாது. கர்த்தர் தாமே நம்முடைய பாவங்களை மன்னிக்கவேண்டும். நம்மைநாமே வஞ்சித்துக்கொள்ளக்கூடாது. நம்மை வஞ்சிப்பதற்கு சாத்தான் காத்துக்கொண்டிருக்கிறான்.

இயேசுகிறிஸ்துவின் மார்க்கம் பாவிகளின் மார்க்கம். பாவிகளை மனந்திரும்ப வைப்பதற்காகவும், அவர்களை இரட்சிக்க வைப்பதற்காகவுமே இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். விசுவாசிகளாகிய நாம் நம்முடைய பாவங்களை உணரவேண்டும். பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும். இரட்சிக்கப்பட்டிருக்கிற நாம், நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், அநுதினமும் நம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்பிக்கொண்டேயிருக்கவேண்டும். நம்முடைய விசுவாசம் அநுதினமும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். நாம் அநுதினமும் இரட்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கவேண்டும்.

நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவை நாம் நேசிக்கவேண்டும். நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நாம் பொய்யராயிருப்போம். நாம் பாவம் செய்யவில்லையென்போமானால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். இயேசுகிறிஸ்துவினுடைய சத்திய வார்த்தை நமக்குள் இராது.

இந்த உலகத்தில் பாவம் எப்போதுமே நிரம்பியிருக்கிறது என்று தேவன் சாட்சியாக அறிவித்திருக்கிறார். உலகத்தின் பாவத்தை நீக்குவதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்மையே பாவநிவாரண பலியாகச் செலுத்தினார். எல்லா காலத்திலும் பாவம் இருந்தது, இருக்கிறது, இருக்கும். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய பாவத்தை மீட்கும் மீட்பின் கிரயமாகச் செலுத்தப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.

நமக்குப் பாவமில்லை என்று சொல்வோமானால், இயேசுகிறிஸ்து தம்மை பாவநிவாரண பலியாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லுகிறோம். இப்படிச் சொல்வதினால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். இந்த உலகத்தில் பாவம் இருப்பதினால்தான் இயேசுகிறிஸ்து தம்மையே பாவநிவாரண பலியாகச் செலுத்தினார்.

நமக்கு பாவமில்லையென்று சொல்லி நம்மை வஞ்சிக்காமல், நம்முடைய பாவங்களை நாம் கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கையிடவேண்டும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமென்றால், நம்முடைய பாவங்களை கர்த்தரிடத்தில் அறிக்கையிடவேண்டும். பயபக்தியோடும் விசுவாசத்தோடும் பாவத்தை அறிக்கையிடவேண்டும். முதலாவதாக நாம் பாவிகள் என்பதையும், நம்மிடத்தில் பாவம் உண்டு என்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். நமக்குப் பாவமில்லை என்போமானால் நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். நம்மை நாம் வஞ்சித்துவிடாமல், நம்மிடத்தில் பாவம் உள்ளது என்று சொல்லி, அந்தப் பாவத்தை கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கையிடவேண்டும். அப்போது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிப்பார். நம்மிடத்திலுள்ள எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பார். நம்மை மன்னித்து சுத்திகரிப்பதற்கு இயேசுகிறிஸ்து உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

நாம் தேவனுடைய சமுகத்தில் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும்போது, அவர் உண்மையும் நீதியுமுள்ளவர் என்பதை அங்கீகரிக்கவேண்டும். தேவன் தம்முடைய வார்த்தைக்கும், வாக்குத்தத்தத்திற்கும் உண்மையுள்ளவர். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், தேவன் நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிப்பார். இது தேவனுடைய வாக்குத்தத்தம். தேவனுடைய வார்த்தையின் பிரகாரமாகவே நம்முடைய பாவங்களை நாம் அவருடைய சமுகத்தில் அறிக்கையிடுகிறோம்.

தேவன் உண்மையும் நீதியுமுள்ளவர். அவர் கிருபையும் இரக்கமும் மிகுந்தவர். தம்முடைய கிருபையினால் நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிக்கிறவர். தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் அவர் நம்மைச் சுத்திகரிக்கிறவர். எல்லா அநியாயத்தையும் நம்மைவிட்டு நீக்குகிறார். தேவன் தம்முடைய வார்த்தையில் உண்மையும் நீதியுமுள்ளவர்.

B. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் நம்மை இரட்சிப்பதற்குத் தேவன் செய்யும் காரியங்கள்

1. அவர் நமக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்.

2. அவர் நமக்கு நீதியுள்ளவராய் இருக்கிறார்.

3. அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார்.

4. எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறார்.